தமிழ் மக்களின் தேசிய உணர்வும் கொள்கை நிலைப்பாடும்
ஈழத் தமிழர்கள் எப்போதும் பண்பாட்டோடும், வரலாற்றோடும், மண்ணோடு ஒட்டிய வாழ்வோடும் பின்னிப் பிணைந்தவர்கள்.
அதனைக் கடந்தகால ஈழத் தமிழர் வரலாறு நிருபிக்கிறது. 1621 போர்த்துக்கேயிடம் தம் இறைமையை இழந்த போதும் கடந்த 400 ஆண்டுகால வரலாற்றில் தமிழ் மக்களின் அரசியல், பொருளியல், பாண்பாட்டியலில் பெரிய மாற்றங்கள் எதனையும் அந்நியர்களால் ஏற்படுத்த முடியவில்லை.
அவ்வாறே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைப் பேரவலத்தின் பின்னும் தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளில் இருந்து விட்டுவிலகிவிடவில்லை. தமிழ் மக்கள் எப்போதும் இலட்சியத்தின் பக்கமே நின்றிருக்கிறார்கள், நிற்பார்கள் என்பதை தற்போத நடந்நு முடிந்துள்ள தமிழரசு கட்சியின் தலைவர் தேர்விலும் வெளிப்பட்டிருக்கிறது.
இங்கே எந்த தனிப்பட்ட மனிதர்களுடைய குறைகளையோ, நிறைகளையோ, செயலாண்மைகளையோ வியாக்கியானப்படுத்துவது இப்பந்தியின் நோக்கம் அல்ல.
ஈழத் தமிழ் அரசியல்
இக்கட்டுரை முழுமையாக ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல், சமூகவியல் குணாம்சத்தை வெளிப்படுத்துவதற்காகவே வரையப்படுகிறது.
நாம் சரியாகவும், நேர்மையாகவும் நடந்தால் மாத்திரம் போதாது. நாம் சரியாகவும், நேர்மையாகவும் நடக்கிறோம் என்பது மற்றவர்களால் ஏற்கப்படவும், நம்பப்படவும் வேண்டும். அதுவே வெகுஜன அபிப்பிராயம்(public opinion) எனப்படுகிறது.
வெகுஜன அபிப்பிராயத்தை தக்கவைப்பது என்பது மிகவும் அவசியமானது. எத்தகைய தூய்மையான தத்துவங்களாயினும், எத்தகைய மதிநுட்பமான தந்திரங்களாயினும், எவ்வகையான முன்னேற்றகரமான திட்டங்களாயினும் அவை பொதுமக்களால் நம்பப்படவும், ஏற்கப்படவும் வேண்டும்.
மக்களால் ஏற்கக் கூடிய வகையில் செயல்ப்படுத்தப்படவும் வேண்டும். இல்லையேல் அவை மக்களால் நிராகரிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட விடும்.
எனவே வெகுஜன அறிவிப்பிராயத்தை பதிக்கப்படாமல் பாதுகாப்பது தமிழ் அரசியல் பரப்பில் இருக்கின்ற அனைத்து தலைவர்களும் இப்போத மிக மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய பாடமாகும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் சேர். பொன். இராமநாதனின் அரசியலில் தமிழ்மக்கள் சார்ந்த கொள்கையின் நம்பிக்கையீனமே ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
1936ல் ““தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா““ என்ற கோஷத்துடன் மேல் எழுந்த ஜி.ஜி மலையக மக்களின் வாக்குரிமை பறிப்புடன் பொதுமக்கள் அபிப்பிராயத்தை இழந்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரசில் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஆ.தியாகராஜா 1952 ஆம் ஆண்டு "24 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும்"என்ற ஒரு சிறு நூலை எழுதினார்.
அரசியல் தீர்வு
ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு என்ற கொள்கையை முதன்முதலில் முன்வைத்த போதும் கட்சி இலங்கையின் ஒற்றை ஆட்சியையே வலியுறுத்தி நின்றதன் விளைவு 1956ம் ஆண்டு தேர்தலில் ஜி. ஜி தோற்கடிக்கப்பட்டார்.
இதன் மூலம் அவரின் 20 ஆண்டுகால அரசியல் தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டது. ஒரு தலைவன் தான் தலைமைவகிக்கும் காலத்தில் நிகழ்ந்த நல்ல, கெட்ட விடயங்கள் அனைத்திற்கும் அந்த தலைவனே பொறுப்பு.
அதன் பின்னர் தமிழ் காங்கிரஸ் இன்றுவரையான எழுவது ஆண்டு காலத்தில் மூன்று ஆசனங்களுக்கு மேல் பெற முடியவில்லை.
அதன்பின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் கொள்கை தவறிவிட்டது, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது என்ற அடிப்படையில் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து எஸ்.ஜே.வி செல்வநாயகம் நாகநாதன் வன்னியசிங்கம் போன்றவர்கள் 1949ல் உருவாக்கிய சமஸ்டிக் கட்சி (இலங்கை தமிழரசு கட்சி) அதாவது Federal party 1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 10 ஆசனங்களை பெற்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
இதனை அடுத்து அன்றைய சுதந்திரத் கட்சி அரசாங்கத்துடன் தமிழரசுக் கட்சி தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வென்றை பெற்றுக்கொள்ளம் நோக்குடன் மூன்று பிராந்திய சபைகளை அமைக்க ஒப்புக்கொண்டு 1957 ஜூலை 26ல் பண்டா-செல்வா ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டது அந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவில் கிழித்தறியப்பட்டு செல்வநாயகம் ஏமாற்றப்பட்டார்.
தொடர்ந்து சமஷ்டி என்ற கொள்கையில் செல்வா உறுதியாகவே செயல்பட்டதாக தமிழ்மக்களால் நம்பப்பட்டது. இந்நிலையில் 1965 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இத்தேர்தலில் 14 ஆசனங்களை பெற்ற தமிழ் அரசு கட்சி தமிழர் அரசியல் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வையாவது பெறுவதற்காக சமஸ்டியிலிருந்து கீழ் இறங்கி பிராந்திய சபைக்கு வந்து பின் அது தோல்வியடைய அதிகம் கீழ் இறங்கி 7 மாவட்ட சபைகள் அமைக்கும் திட்டத்திற்கும் செல்வா ஒத்துப்போனார்.
மாவட்டசபைகள் அமைக்கும் தீர்வை ஏற்று 1965, மார்ச் 24ல் டட்லி-செல்லா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர் எனினும் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு செயலிழந்து செத்தப்போனது.
1970ஆண்டு தேர்தல்
இருந்தபோதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வநாயகத்திற்கு இருந்த பொதுமக்கள் அபிப்பிராயம் என்பது வீழ்ச்சி அடையவில்லை. சமஸ்டி கோரிக்கையிலிருந்து மாவட்ட சபைக்கு செல்வா இறங்கிய போதும் தமிழ் மக்கள் செல்வாவை நம்பினார்கள்.
சமஸ்டி அடைவதற்கான ஒரு மூலோபாயமாக மாவட்ட சபையை செல்வநாயகம் முன்னெடுக்கிறார் என்று நம்ப வைக்கப்பட்டது, தமிழ்மக்களால் நம்பப்பட்டது.
மாறாக நம்பப்படாவிட்டால் பத்து வருடங்களுக்குள்ளேயே செல்வநாயகத்தின் தமிழர்களுக்கான தலைமைத்துவம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை அதாவது பொதுமக்கள் அபிப்பிராயம்தான் அவர் 26.04.1977 இறக்கம் வரை சுமார் 20 ஆண்டுகள் ஈழத் தமிழனின் தலைவராக அவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
அவர் மீதான பொதுமக்கள் அபிப்பிராயம்தான் அவரை "தந்தை செல்வா"என தமிழ் மக்கள் இன்றுவரையும் அழைக்க காரணமாகவும் இருக்கிறது.
எனவே நம்பகத்தன்மையான பொதுமக்கள் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவது, அதனைத் தொடர்ந்து தக்க வைப்பது என்பவை அரசியல் செயற்பாட்டுத் தளத்தில் முக்கியமாக கருத்துக் கொள்ள வேண்டும்.
1970ஆண்டு தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பிலிருந்த தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய கூட்டணியை உருவாக்கின.
தமிழர் ஐக்கிய கூட்டணியில் இருந்து தொண்டமான் வெளியேறிச் செல்ல தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சியும், தமிழரசு கட்சியும் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாடு வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் நிகழ்ந்தது.
இம் மகாநாட்டின் முடிவில் 1976 மே 14 ம் திகதி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக வட- கிழக்கை தனி நாடாக உருவாக்கும் "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" நிறைவேற்றப்பட்டது.
வட்டுக்கோட்டை தீர்மானம் எனப்படும் தனித் தமிழீழம் என்ற இலட்சியத்தை தமிழ் மக்களிடம் முன் நிறுத்தியே 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கிய அ.அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் தலைமை தேர்தலை எதிர்கொண்டு தமிழ் மக்களின் 78% வாக்குகளை பெருவெற்றி ஈட்டினர். இங்கே தமிழ் மக்கள் தமது இலட்சியத்தின் பக்கமே வாக்களித்து இருக்கின்றனர் என்பதே முக்கியமானது.
1977 ஆம் ஆண்டு தேர்தலின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணி தாம் முன்வைத்த தமிழ் மக்களின் இலட்சியத்தை நோக்கி ஒரு அடிதானும் முன்நகரவில்லை. மாறாக 1982ம் ஆண்டு சிங்கள தேசத்தின் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு இறங்கி வந்து பேரம் பேசும் வரைக்கும் தமிழ் மக்களால் அமிர்தலிங்கம் நம்பப்பட்டார்.
ஆயுதப் போராட்டம்
ஆனால் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு வந்த பிற்பாடு அவர் மீது இருந்த பொதுமக்கள் அபிப்பிராயம் என்பது அடியேடு அற்றுப் போய்விட்டது. இந்த நிலையில் ஆயுதப் போராட்டமும் முன்னிலைக்கு வரத் தொடங்க 1982 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் பொதுமக்கள் மத்தியில் வெற்றிகரமாக எந்த ஒரு கூட்டங்களை கூட நடத்த முடியாமல் போய்விட்டதே என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
இந்நிலையில் 24.07.1984 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி எம்பிக்கள் நல்லூர் வீரகாளியம்மன் கோவிலில் நடத்திய இறுதியான உண்ணாவிரதப் போராட்டமும் இளைஞர்களால் இடைநிறுத்தப்பட்டு குழப்பியடிக்கப்பட்டது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டணியினர் இலட்சியத்தை அதாவது கொள்கையை விட்டு விலகியபோது அதே கொள்கையை ஆயுதப் போராட்டம் கையில் எடுத்ததனால் தமிழ் மக்களின் ஆதரவு ஆயுதப் போராட்டத்தின் பக்கம் சென்றுவிட்டது.
இங்கே தமிழ் மக்களுக்கு கொள்கைதான் முக்கியம் என்பது நிரூபணமானது. மிக முக்கியமாக அதுவும் ஆயுதப் போராட்டம் தரவல்ல பேராபத்துக்கள், பெருவலிகளை தாங்கவும் தயாராக மக்கள் இருந்தார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்ட திம்பு பேச்சு வார்த்தையிலும் தமிழ் மக்களின் ஆதரவு ஆயுதப் போராட்ட இயக்கங்களின் பக்கமே இருந்ததையும் கவனிக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து 1987இல் இந்தியா இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது தமிழ் மக்களின் இலட்சியத்தை சுமந்தவர்களின் பின்னே தமிழ் மக்கள் நின்றதை சுதுமலை பொதுக்கூட்டத்தில் திரண்ட மக்கள்வெள்ளத்தை கொண்டே கணிப்பிடலாம். அந்த கூட்டம் தமிழ் மக்களின் கொள்கை பற்றை பறைசாற்றி நிற்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் முறிவடைந்து இந்தியப் படையுடன் விடுதலைப்புலிகள் சண்டையிட்ட போதும், ஒரு பெரும் வல்லரசோடு ஒரு சிறிய தேசிய இனத்தின் சிறிய படைப்பிரிவு சண்டையிட்டு வெல்ல முடியுமா? என்ற பலமான கேள்வி எழுந்த நிலையிலும் தமிழ் மக்களின் இலட்சியத்தைச் சுமந்த விடுதலைப் புலிகளின் பின்னே நின்றார்கள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.
இந்த தொடர் அரசியல் நிகழ்வுகளின் பின்னே 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அந்தத் தோல்வி என்பது தமிழ் மக்களின் இலட்சியத்தை கைவிட்டதனால்தான் தமிழ் மக்கள் அவரை நிராகரித்தனர் என்பதை சுட்டி நிற்கிறது.
அதுமட்டுமல்ல அந்தத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் இந்திய ராணுவம் வடகிழக்கில் முழுமையாக நிலை கொண்டு இருந்த நிலையிலும் இலட்சியத்தை விடாப்படியாக ஏந்தி நின்ற விடுதலைப் புலிகளின் பின்னே நின்ற ஈரோஸ் அமைப்பு தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டபோது தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்து ஒன்பது ஆசனங்களை ஈரோஸ் அமைப்பிற்கு வழங்கி இருந்தார்கள் என்பது இங்கே தமிழ் மக்கள் இலட்சியத்திற்கே முன்னுரிமை கொடுத்ததையே வெளிக்காட்டி நின்றது.
1989 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் வட-கிழக்கு தழுவிய முழுமையான ஒரு தேர்தல் என்பது 2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது.
அந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகளை ஏகத்தலைமையாக ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் போட்டியிட்டது. இதில் 22 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றி ஈட்டப்பட்டது.
தமிழரசுக் கட்சி தலைவர் போட்டி
இந்த வெற்றி என்பது தமிழ் மக்கள் தமது இலட்சியத்துக்காக வழங்கிய வாக்கு என்பதே உண்மையாகும். 2004இல் யாழில் அதிகூடிய வாக்கப்பெற்ற செ.கஜேந்திரன் 2020 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார் அவ்வாறே தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனதிராஜாவும் தோற்கடிக்கப்பட்டார்கள்.
எனவே தமிழ் மக்கள் தமது இலட்சியத்தின்பால் யார் நிற்கிறார்களோ அவரின் பக்கமே எப்போதும் நின்று இருக்கிறார்கள். அது அரசியலாக இருந்தாலும்சரி யுத்தமாக இருந்தாலும்சரி இலட்சியத்திற்காக எத்தகைய பேராபத்துகளை எதிர்கொள்ளவும் தமிழ் மக்கள் தயாராக இருந்தார்கள் என்பதை உண்மையாகும்.
இதை இன்னொரு வகையில் பார்த்தால் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்களை உற்று நோக்கினால் தமிழ்மக்களின் இலட்சியத்துக்கு எதிராகவும் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிங்களத் தலைவர்களுக்கு எதிராகவே தமிழ் மக்கள் எப்போதும் வாக்களித்து இருக்கிறார்கள்.
வாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 2010ல் நடந்த தேர்தலிலும் சரி 2015ல் நடந்த தேர்தலுடன் சரி 2019ல் நடந்த தேர்தலிலும் சரி ராஜபக்சகளுக்கு எதிராகவே தமிழர் நிலத்தில் வாக்குகள் பதியப்பட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இந்தப் பின்னணியில் இன்று தமிழ் அரசியல் பரப்பில் தமிழரசு கட்சிக்குள் தலைவரை தேர்வு செய்வதிலும் இலட்சியம் பொதுமக்கள் அபிப்பிராயம் என்ற இரண்டும் முக்கிய பாத்திரத்தையும் பங்கையும் வழங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கூடிய எந்த மூலோபாயத்தை வகுத்தாலென்ன, நேரடியாக களத்தில் இறங்கி தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வை கண்டாலென்ன, தமிழ் மக்களின் இலட்சியத்தை ஒருவர் கைவிட்டு விட்டார் அல்லது அவர் இலட்சியத்தின்பால் இல்லை என மக்கள் கருதும் பட்சத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டுவிடுவார்.
தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தலைவர் போட்டியில் திரு சுமந்திரன் தோல்வி அடைந்திருக்கிறார் என்பதை முக்கியமாக இங்கே கருத்துக் கொள்ள வேண்டும்.
சுமந்திரன் அவர்கள் மும்மொழிப் புலமை வாய்ந்தவர் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடிகள் வழக்குகளை சாதுரியமாக வெல்லக் கூடியவர்.
எந்த தருணத்திலும் எந்த இடத்திலும் சென்று நிற்கக் கூடியவர். இருப்பினும் அவர்மீதான நம்பிக்கையினம் ஊடகங்கள் வாயிலாகவும், தமிழ் தேசியவாதிகள் என தம்மைத்தாமே சொல்லிக் கொள்வவோராலும் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு விட்டது.
அதனாலேதான் அவர் இந்த உட்கட்சி தேர்தலில் கட்சியின் பேராளர்களின் அபிப்பிராயத்தை இழந்து இருக்கிறார். எது எப்படியோ நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல நாம் என்ன செய்கிறோம் என்பதோடு நாம் சரியாகவும் நேர்மையாகவும் நடக்கிறோம் என்பது மாத்திரமல்ல நாம் சரியாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம் என்பது மக்களால் நம்பப்படவும் வேண்டும் என்பதே அரசியலில் முக்கியமானது.
அதனை கருத்திற்கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் எதிர்காலத்தில் செயற்படுவார்களா?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 18 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.