வவுனியாவில் மயான அபிவிருத்தி பணியில் குழப்பநிலை(Photos)
வவுனியா - இராசேந்திரங்குளம் மயானத்தை தூய்மைப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை நேற்று(5) முன்னெடுக்கப்பட்ட போது அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மயானத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதியில் இந்துக்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
சுத்தபடுத்தும் பணி
இந்நிலையில் பிரதேச சபையின் அனுமதி பெற்று குறித்த மயானத்தை தனிநபர் ஒருவரின் நிதிப் பங்களிப்பின் கீழ் தூய்மைப்படுத்தி சுற்றிவர நிழல் மரங்கள் நாட்டி, தகன கொட்டகை மற்றும் நீர்தாங்கி என்பவற்றை நிர்மாணிப்பதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த மயானத்தை உழவு இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீண்ட காலத்திற்கு முன் கிறிஸ்தவர்களின் உடல் புதைக்கப்பட்டு அடையாளமின்றி காணப்பட்ட சில இடங்களும் உழவு இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது.
கிறிஸ்தவ மதகுருவின் முறைப்பாடு
அங்கு வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவரும், கிறிஸ்தவ மக்களும் தமது உறவினர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சுத்தம் செய்தமையால் அவற்றின் இடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு நின்ற அபிவிருத்தி உத்தியோகத்தருடன் முரண்பட்டுள்ளனர். இந்நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவரது நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இருப்பினும் அதனை ஏற்க மறுத்த கிறிஸ்தவ மதகுரு, நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்களை அழைத்துச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையினை அறிந்து அதனை கிறிஸ்தவ மக்களுக்கு தெளிவுபடுத்தியதுடன், கல்லறைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் உடல்கள் புதைக்கப்பட்டு அடையாளமின்றி இருந்தமையால் உழவு இயந்திரம் மூலம் சில இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் தெரியும் படி மண் போட்டு உயர்த்தி விடுமாறு மக்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கிறிஸ்தவ, இந்து முரண்பாடுகளை ஏற்படாத வகையில் பொலிஸார் செயற்பட்டமையினால் அங்கு அமைதி நிலை ஏற்பட்டு தொடர்ந்தும் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






