அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பழுதுபட்டுள்ளது: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
நாட்டை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரை ஆகியோரை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த நம்பிக்கை பழுதுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டை சௌபாக்கியம் நிறைந்த நாடாக மாற்ற அனைவரும் விரும்பினாலும் யாருடை பாவமோ, யாருடை தோஷமோ, யாருடைய அழுத்தமோ தெரியவில்லை. மக்கள் வெறுப்படைந்துள்ளதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. மக்களின் வெறுப்புக்கு காரணம் என்ன என்பதை அறியாமல் முன்னோக்கி செல்ல முடியாது.
தற்போது அமைச்சர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தால், பதிலளிக்க எவரும் இல்லை தொலைபேசிகளுக்கு கொரோனா தொற்றியுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் தெரிவு செய்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் துன்ப துயரங்களை அறிய அவர்களிடம் செல்ல வேண்டும். கொரோனா பரவும் என்ற அச்சம் இருந்தால், விலகி சென்று விட வேண்டும்.
அமைச்சரவையில் இருக்கும் 5 அமைச்சர்களிடம் கூட தொலைபேசியில் உரையாட முடியவில்லை. அலுவலக உதவியாளர்களிடம் வேலையில் இருப்பதாகவும் பின்னர் பேசுவதாகவும் கூறுகின்றனர்.
நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் முதலில் அமைச்சரவையை சீர்செய்து, நிறுவனங்களை சீர்செய்ய வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.