நடனேந்திரனின் மரணத்திற்கு இரங்கல் செய்தி தெரிவித்த சிறீதரன் எம்.பி
இலங்கைத் தமிழரசுக் கட்சியை மானசீகமாக நேசித்து, இறுதிவரை கட்சிசார் கொள்கைப் பற்றுறுதியோடு பயணித்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளனும், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மேனாள் தவிசாளருமாகிய அன்புச் சகோதரன் நடனேந்திரனின் திடீர் மறைவு பெருந்துயரைத் தந்திருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடனேந்திரனுக்கும் எனக்குமான உறவும், அதுதந்த இணைப்பின் இறுக்கமும், நெருக்கமும் மிக ஆழமானது எனவும் கூறியுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் நேற்று (14) காலமானதை தொடர்ந்து வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.
கட்சிக்கு பேரிழப்பு
“குடும்ப நண்பனாகவும், உடன்பிறவாச் சகோதரனாகவும், அரசியல் சார்ந்து என்னை ஆழ நேசித்த ஒருவனாகவும் இறுதிவரை இருந்த தம்பி நடனேந்திரன், எமது கட்சியின் மிகத்தீவிர விசுவாசி.
கட்சி நலன் சார்ந்து எத்தகைய இடர்களை எதிர்கொள்வதாயினும் அதற்காக சளைப்பற்று உழைத்த ஒருவரை இத்தனை அகாலத்தில் இழந்திருப்பது தனிப்பட எனக்கும், அதைத்தாண்டி எமது கட்சிக்கும் பேரிழப்பே..!
2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் ஆணைபெற்று, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக சபையை வழிநடாத்திய போது, தன்முன் ஏராளமான தடைகளும், சவால்களும் நிறைந்திருந்த போதும், தனிமனித ஆளுமை, மக்கள் நலன்சார்ந்த சிந்தனை என்பவற்றால் அவற்றை நிதானமாகக் கடந்து, மிக நேர்த்தியாக மக்கள் பணியாற்றிய நடனேந்திரன், அத்தகு தீர்க்கமும் தெளிவும் நிறைந்த அணுகுமுறையையே தனக்கான அடையாளமாகவும் மாற்றியிருந்தார்.
தான் பிறந்து, வளர்ந்த பூர்வீக மண்ணையும், மக்களையும் தன் உயிரினும் மேலாக நேசித்து இறுதிவரை அந்த மக்களின் நலனுக்கான அத்தனை கருமங்களையும் முழுமூச்சாய் ஆற்றிமுடித்திருக்கிறார். ஈழத்தமிழர்களின் இறைமையை உறுதிசெய்வதற்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட எல்லாப் போராட்டங்களிலும் நடனேந்திரனின் பங்கும் எப்போதும் நிறைவாகவே இருக்கும்.
திடீர் இழப்பு
அத்தகையதோர் செயல்வீரனின் திடீர் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்திருக்கிறது.
அன்னாரின் ஆத்மா அமைதிபெறவும், இந்தப் பேரிழப்பால் பெரிதும் கலங்கிநிற்கும் அவரது குடும்பத்தினர், உறவுகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவரது இழப்பை ஏற்கும் மனவலிமை வாய்க்க வேண்டும் என்றும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை இறைஞ்சுகிறேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |