நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நிபந்தனைகளுடனான அனுமதி
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று முதல் வழமை நிலைக்குத் திரும்புவதாகவும் நீதிமன்றுக்கு வருவோர் சுகாதார நடைமுறைகளைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற கோவிட் தொற்று காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேற்று முன்தினம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கின்ற சுற்றறிக்கை மூலமாகக் குறித்த நீதிமன்றங்களை நடத்துவதற்கான சில நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம், ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழில் நியாய மன்றிலே எவ்வாறான முறையில் பொதுமக்கள் வழக்குகளுக்காக உள்ளெடுக்கப்படவிருக்கின்றார்கள், எவ்வாறான முறையில் வழக்குகள் கையாளப்படவிருக்கின்றன என்பது தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.
குறித்த நீதிமன்றங்களுடைய பகுதிகளிலே நுழைவாயிலுக்கு அருகிலோ, உள்வீதிகளுக்குள்ளோ, நீதிமன்றக்கட்டிடங்களுக்குள்ளோ எந்தக் காரணம் கொண்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களிலே எடுக்கப்படுகின்ற விளக்க வழக்குகள் தொடர்பாக அனேகமான விளக்க வழக்குகள் நீதவான் நீதிமன்றத்திலே எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
அந்த சந்தர்ப்பத்தில் அவ்வழக்கிற்குரிய எதிரிகளாகக் காணப்படுகின்றவர்கள் அல்லது சாட்சிக்காரர்கள் தங்களுடைய சட்டத்தரணிகள் மூலமாக அதனை உறுதிப்படுத்திக்கொண்டு நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டிய தேவைப்பாடுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
அழைக்கப்படுகின்ற வழக்குகளாகக் காணப்படுகின்ற போது அவர்கள் நீதிமன்றத்திற்குள் உள்வாங்கப்படமாட்டார்கள்.
அவர்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவை இருக்கின்றதா, இல்லையா என்ற விடயத்தினை அவர்கள் தங்களுடைய சட்டத்தரணிகளுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பினை ஏற்படுத்தி தனக்கு இந்தத் திகதியில் வழக்கு இருக்கின்றதென்றும் அதற்குத் தான் சமூகம் கொடுக்க வேண்டுமா என்ற விடயங்களைக் கேட்டு அதன் பின்னர் குறித்த விடயம் குறித்த நீதிமன்ற நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டு அதனூடாக உறுதிப்படுத்தப்பட்டு அதன்பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவார்களா என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.
அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற வழக்கிற்குரியவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள். குறித்த வழக்குகளிலே தாபரிப்பு வழக்குகள், அவசரமாகக் கூட்டப்படவேண்டிய வழக்குகள் மற்றும் பிணை சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகள் சாதாரணமாகவே திறந்த நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுகாதார நடவடிக்கைகளை முற்று முழுதாக கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்ற தேவைப்பாடு சகலருக்கும் இருக்கின்றது. முகக்கவசம் அணிந்து வரவேண்டும், கைகள் கழுவப்படவேண்டும் போன்ற முக்கியமான விடயங்கள் அனைத்தும் அங்கு பின்பற்றப்படவேண்டும்.
அவ்வாறு பின்பற்றாத நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அங்கு காணப்படுகின்றன. மாவட்ட நீதிமன்றங்களை பொறுத்த வரையிலும் எந்தெந்த வழக்குகள் அழைக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் விளக்கத்திற்கு எடுக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் இரண்டு சட்டத்தரணிகளும் கலந்தாலோசித்து மாவட்ட நீதிபதியினுடைய அனுமதி பெறப்பட்டு அதனூடாக அவ்வழக்குகள் எவ்வாறு கொண்டுசெல்லப்படவேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
இந்த சந்தர்ப்பத்தில் வழக்கிற்குரிய நபர்கள், எதிராளிகள் நிச்சயமாக தங்களுடைய சட்டத்தரணிகளுடன் தெலைபேசியில் தொடர்புகொண்டு அதற்கேற்ற வகையிலே தங்களுடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் கூடி நிற்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. நீதவான் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையிலே விளக்க வழக்குகள் அழைக்கப்படுகின்றபோது அவ்வழக்குகளை எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
அவ்வாறான சூழ்நிலைகளில் தற்போது நாட்டிலிருக்கின்ற மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை காரணமாகக் கிழக்கு மாகாணத்தைத் தவிர்த்து வேறுமாகாணங்களிலிருந்து வரவேண்டிய எதிரிகளோ, சாட்சிகளோ இருப்பார்களானால் அவர்களுக்கு பிடிவராந்து பிறப்பிக்கப்படமாட்டாது.
ஆனால் கிழக்கு மாகாணத்திற்குள் இருந்துகொண்டு அவர்கள் விளக்க வழக்குகளுக்கு வரத்தவறுவார்களானால் அவர்களுக்கு பிடிவராந்து வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது.
இவற்றைத் தவிர்ப்பதற்காகக் குறித்த வழக்காளிகள் தங்கள் சட்டத்தரணிகளுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமாக இந்த விடயங்களைத் தவிர்த்துக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து இந்த கொவிட் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
