அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம்
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியமையால் ஏற்பட்ட அமைதியின்மையை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது அதிரடிப்படையினரும், பொலிஸாரும் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம்
கொழும்பில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும்,தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் உடன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண ஊடக மன்றம்
நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை தலைமைத்துவமாக கொண்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தெரிவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக இன்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.
குறித்த சம்பவங்களை நீண்ட நாளாக மக்களின் குரலாக பல்வேறு வழிகளிலும் வெளி கொண்டு வந்த ஊடகங்கள்,செய்தியாளர்கள் நால்வர் மிகவும் கொடூரமாக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஊடகம் ஒரு நாட்டின் பிரதான
சக்தியாக இருந்து வரும் வேளையில் உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துச்
சொல்லும் ஊடகங்களை கண்மூடித்தனமாக தாக்குகின்ற அரசின் செயற்பாடு அதிலும்
குறிப்பாக பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலை யாழ்ப்பாண ஊடக மன்றம்
என்ற ரீதியில் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.