நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட பாடநெறியின் முதலாவது கட்டம் பூர்த்தி
இலங்கை நாடாளுமன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பித்த நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால பாடநெறியின் முதலாவது கட்டம் அண்மையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக இந்த பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடநெறியின் வளவாளர்களாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் நாடாளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அங்குரார்ப்பண நிகழ்வு
இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இப்பாடநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், இதில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக முதலாவது விரிவுரையை நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் கடந்த 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி.கே ஜயதில மற்றும் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா ஆகியோர் விரிவுரைகளை நடத்தியிருந்தனர்.
ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறைமை பற்றிய கோட்பாட்டு அறிவின் அடிப்படையில் இந்தக் குறுகிய பாடநெறியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய அனுபவத்துடன் கூடிய பெறுமதியான குறுகிய பாடநெறி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய அனுபவத்துடன் கூடிய பெறுமதியான குறுகிய பாடநெறியாக அமைந்தது என கொழும்புப் பலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி பிரதீப் பீரிஸ் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திசாநாயக ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய பல்கலைக்கழகங்களில் அரசியல் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கு இந்த குறுகிய பாடநெறியை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



