இராணுவ மேஜர் மீது பொலிஸில் முறைப்பாடு - போதைப்பொருள் கடத்தல் கும்பலால் அச்சுறுத்தல் அதிகரிப்பு
ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும் குழுவொன்று, போதைப்பொருள் வியாபாரம் செய்பவர்களுடன் இணைந்துக் கொண்டு செயற்படுவதாக ஏறாவூரைச் சேர்ந்த செய்யது முகமது பளீல் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நேற்று(01.10.2026) அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் நீண்டகாலமாக இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கிவருகிறேன். ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அன்ஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருளை ஒழிக்கும் குழு என்ற பெயரில் ஒரு குழுவை இயக்கி வருகின்றார்.

இதில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருக்கிறார்கள், இவர்களில் பலர் போதைப்பொருள் மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருளை அப்பாவி இளைஞர்களிடம் வைத்து அவர்களை கைது செய்ய வைத்து வருகின்றனர்.
இவ்வாறு மேஜர் அனஸ் குழுவின் செயல்பாடு தொடர்பாக நான், தகவல்களை வழங்கி வருவதால் அனஸ் குழுவினர் என்னை பாதுகாப்பு படைகளுக்கு இரகசிய தகவல்களை வழங்க கூடாது என்றும், இராணுவ மேஜர் தான் இங்கு போதைப்பொருள் தொடர்பாக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளதாக அந்த குழுவினர்கள் என் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
இராணுவ மேஜர் மீதான குற்றச்சாட்டு
இவ்வாறான நிலையில், அண்மையில் அவருடைய குழுவுடன் வந்த இராணுவ மேஜர் அனஸ் அப்பாவி இளைஞர் ஒருவரை போதைப்பொருள் வைத்து பிடிப்பதற்காக வந்தார்.

அந்த சமயத்தில் நான் அவரை தடுக்க முயற்சி செய்தேன், இந்த சம்பவத்தில் அவர் என்னை மோட்டார் சைக்கிள் தலைகவசத்தால் தாக்கினார். இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், மின்னேரியா இராணுவ முகாமிற்கு முறைப்பாடு செய்துள்ளேன், இருந்தபோதும் என்னை தாக்கிய மேஜர் மீது பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, என்னை போதைப்பொருள் அல்லது குண்டுகள் வைத்து கைது செய்வேன் என இராணுவ மேஜர் அனஸ் தலைமையில் இயங்கி வரும் குழுவினர் மிரட்டி வருகின்றனர்.
குறித்த அதிகாரி கொழும்பில் இருந்து வீட்டிற்கு வரும் பொழுது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.