படுகொலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கையின் பொலிஸ் மா அதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த மெலோன் மாபுலா அல்லது ‘உரு ஜுவா’ முன்னதாக கொல்லப்பட்டார்.
இந்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையத்திற்கு வெளியே உயிரிழந்திருந்தனர்.
தாரக தர்மகீர்த்தி விஜேசேகரவின் உயிர்ப் பாதுகாப்பு குறித்து எச்சரித்த போதிலும், பொலிஸ் மா அதிபர் ஏன் தனது உத்தியோகபூர்வ அதிகாரத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கமைய இந்த கொலைக்கு பொலிஸ் மா அதிபரின் உதவி மற்றும் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை சாதாரணமாகவே வெளிப்படுவதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தனது பொறுப்பினைத் துறந்து செயற்படுவாராயின், அது இலங்கை பொலிஸார் தொடர்பாக குடிமக்களிடையே கடுமையான அவநம்பிக்கையை உருவாக்கும் என அந்தக் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக குடிமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ் ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை அவர் கோரியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை, விசாரணை எனும் பெயரில் வெளியே அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி வெலே சுதாவின் தாய் ஆர்.ஜி.மாலனி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதனடிப்படையில், வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்வதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், தற்போது பொலிஸ் விசாரணை எனும் பெயரில் சந்தேகநபர்களை வெளியே அழைத்து சென்று கொலை செய்யும் நிலை ஒன்றினை அவதானிக்க முடிவதாகவும், அந்த நிலைமை தனது மகனுக்கும் ஏற்படுமோ என மனுதாரர் அஞ்சுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சூட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
