ஊழியர் சேமலாப நிதிய தொழிலாளர்களின் போராட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு
பத்து வருடங்களுக்கு முன்னர், இளம் தொழிலாளர் தலைவரின் உயிரைப் பறித்த மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைத் துன்புறுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எந்தவொரு தொழிலாளிக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எவருக்கும் 10 வருடங்கள் கழித்தும் இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மே 30, 2011ஆம் ஆண்டு, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியத்தை பாதுகாக்க பாரிய போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
போராட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த மறுதினம், ரொஷேன் சானக்க என்ற 22 வயது தொழிலாளி உயிரிழந்தார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்கள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 400 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு மேலும் 3,000 பேர் உடல் ஒவ்வாமைக்கு உள்ளானார்கள்.
ரொஷேன் சானக்கவின் கொலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னமும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த, மஹாநாம திலகரத்ன என்ற நபர் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியங்களை விசாரணை செய்வது இன்னும் நிறைவடையாத நிலையில், வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்ள எவ்வளவு காலம் ஆகும் என்பது நிச்சயமற்றது என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊழியர் சேமலாப போராட்டம் வெற்றி பெற்றமைக்கு சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட தொழிலாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னர், போராட்டத்தை கலைக்க பொலிஸார் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொழிலாளர்களின் உரிமை மீறல்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை என சுதந்திர வர்த்தக வலய ஒத்துழைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தலைவரைக் கொன்ற பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த 16 பேருக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் 2019 ஏப்ரலில் அரசுக்கு உத்தரவிட்டது.
பொலிஸாரால் தாக்கப்பட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி விஜித் மலல்கொட, கருத்துச் சுதந்திரம் உட்பட 16 பேரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
காயமடைந்த மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்கு 50,000 முதல் 250,000 ரூபாய் வரை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் 2019இல் அரசுக்கு உத்தரவிட்டது. எனினும் இதுவரை இழப்பீ எதுவும் வழங்கப்படவில்லை.
