மட்டக்களப்பில் இடமாற்றம் செய்யப்படும் அரச அதிகாரிகள்: ஜனாதிபதியிடம் முறைப்பாடு
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போது, மாவட்டத்தின் பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆளுநருக்கு பணிப்புரை
இந்நிலையில், தேர்தல் அறிவித்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமுர்த்தி ஊழியர்களின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை கேட்டறிந்த ஐனாதிபதி இடமாற்றம் சம்பந்தமாக ஆராயும்படி கிழக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உந்துதலில் இடம்பெறும் இவ்வாறான இடமாற்றங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |