காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் : காதர் மஸ்தான்
நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுத்திட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (23.04.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்களின் மீள்குடியேற்றம்
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் (Solar power)வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது.
இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.
இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் வீட்டுத்திட்டம்
மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது.
உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2500, வவுனியா மாவட்டத்திற்கு 1500, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1500 என வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை
சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும்.
பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயாராக இருக்கின்றார்.
கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |