காணாமல்போனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு
ஸ்ரீலங்காவில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு பல வருடங்களாக தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், காணாமல்போனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல்போனார் என்பதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமான நேற்று முன்தினம் இரவு கொழும்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில், நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும்,இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை போலல்லாது காணாமல்போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்கத் தேவையில்லையென ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுத்திப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் கடந்த போதிலும் இன்னும் காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமென நீதியமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.