அமைச்சர் ஜெயக்கொடிக்கு எதிராக வழக்குப் பதிவு: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விளக்கம்
ஆணைக்குழு தீர்மானம் எடுத்தால், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய ரங்க திஸாநாயக்க,
“இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவுக்கு தான் உள்ளது. இயக்குநர் ஜெனரலுக்கு அல்ல.
இருப்பினும், ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வது இயக்குநர் ஜெனரலாக எனது பொறுப்பு.
விசாரணை
அமைச்சர் ஜயக்கொடி மீதான விசாரணை இறுதி மற்றும் இரகசிய கட்டத்தில் இருக்கின்றது. அது குறித்த தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. இது விசாரணை செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கும்.

பிரச்சினை எழுவது செய்தி வெளியிடுவதில் உள்ளது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்தத் தகவல் எப்படி வெளிவந்தது என்றே நான் கேட்டேன். ஆணைக்குழு இன்னும் இந்த விடயத்தைப் விசாரணை செய்து வருகிறது.

வழக்குப் பதிவு செய்வதா இல்லையா என்பது ஆணைக்குழுவின் முடிவு. ஆனால் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, ஒரு செய்தி வெளிவந்தது. ஆணைக்குழு விசாரணையை தொடர முடிவு செய்தால், குமார ஜயக்கொடிக்கு எதிராக நான் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வேன்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |