இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும்: சுவிஸ் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையில் உள்ள தமிழ் மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் பன்னாட்டு விசாரணை மூலம் போர்க்குற்றங்களுக்கான உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என சுவிஸர்லாந்து நாடாளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பாபியான் மொலீனா 21.12.2023 அன்று சுவிஸர்லாந்து மத்திய அரசிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஒரு மக்கள் சார்பாளர் (பிரதிநிதி) சுவிஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பும் கேள்விக்கு மத்திய அரசாங்கம், சுவிஸ் ஜனாதிபதி உட்பட அனைத்து அமைச்சர்களும், உரிய பதில் அளிக்கவேண்டியது கட்டாயம் ஆகும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள்
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
40 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 இல் நடந்த படுகொலைகள் மற்றும் இலங்கையில் போர் தொடங்கியதன் காரணமாக முதல் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சுவிட்சர்லாந்திற்கு தப்பி வந்துள்ளனர்.
அப்போதிருந்து, புலம்பெயர்ந்த தமிழர்கள் சுவிஸ் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றனர்.
ஆனால், 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் நிலைமை மிகவும் பலவீனமாகவே உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களும், புலம்பெயர்ந்த மக்களும் பன்னாட்டு விசாரணை மற்றும் போர்க்குற்றங்களை ஊசாவி உரிய தீர்வுகளைச் செயலாக்குதல், மேலும் தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குதல் மற்றும் தமிழ்ப் பகுதிகளை இராணுவமயலாக்கத்திலிருந்து விடுவித்து உரிய அரசியல் தீர்வை வழங்க கோரி வருகின்றனர்.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், செப்டம்பர் 2023 முதல் தனது சமீபத்திய அறிக்கையில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அழைப்புகளை அங்கீகரிக்கும் விருப்பமும், நாட்டில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை அடையாளம் காணும் விருப்பமும் இலங்கை அரசுக்கு இல்லை என்று கண்டறிந்துள்ளது.
நல்லிணக்க செயற்பாடு
இந்தச் சூழலில், பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு சுவிற்சர்லாந்து நடுவனரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நல்லிணக்க செயற்பாட்டிற்கான அடிப்படையாக தமிழ்க் குரல்கள் கருதும் போர்க்குற்ற விசாரணை மற்றும் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை சுவிட்சர்லாந்து எவ்வாறு ஆதரிக்கிறது?
நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்மையால் மனித உரிமை அமைப்புகளாலும் ஐ.நா மனித உரிமை ஆணையாளராலும் விமர்சிக்கப்படும் இலங்கை அரசின் "உண்மை ஆணைக்குழு" திட்டத்திற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறு ஆதரவளிக்கிறது?
பெரும்பாலான தமிழ் கட்சிகளாலும், பொதுச்சமூக அமைப்புக்களாலும், தமிழர் புலம்பெயர் அமைப்புக்களாலும் நிராகரிக்கப்படும், ஒரு புலம்பெயர் அமைப்பு மற்றும் ஒரு பௌத்த பிக்குகள் குழு முன்னெடுக்கும் இமயமலைப் பிரகடனத்தை சுவிட்சர்லாந்து அரசு எந்தளவுக்கு ஆதரிக்கிறது?
நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்
இவ்விடயங்கள் குறித்து சுவிட்சர்லாந்து அரசு ஏன் இலங்கையில் உள்ள எந்தத் தமிழ்க் குரலுடனும் கலந்துபேசவில்லை?
சர்வதேசரீதியில் விமர்சிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு காப்பளிக்க சுவிட்சர்லாந்து எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி உள்ளது?
இலங்கையில் தற்போது சித்திரவதை செய்யப்பட்டு கைதிகள் மரணம் அடைவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு சுவிட்சர்லாந்து எவ்வாறு உத்தரவாதம் அளிக்கிறது?
2023ல் இலங்கைக்கு எத்தனை ஆட்கள் நாடுகடத்தப்பட்டள்ளனர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |