அநுரவின் அரசாங்கத்தை வீழ்த்தி சஜித் தலைமையில் புதிய ஆட்சி! கயந்த கருணாதிலக எம்.பி. சூளுரை
தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான வாக்குறுதிகள்
அவர் மேலும் கூறுகையில்,
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி வழங்கிய சகல வாக்குறுதிகளும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்று சுகபோகமாக வாழ்கின்றார்கள்.

ஆனால், அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாக முகாமைத்துவத்தினால் எரிபொருள் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்து காணப்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணமும் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நிர்வாகச் சீர்கேட்டின் ஒட்டுமொத்தச் சுமையும் அப்பாவி மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஆட்சிக்கு வரவேண்டும்..
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச ரீதியாகத் தோன்றும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த அரசாங்கத்திடம் எந்தவிதமான முறையான திட்டங்களும் இல்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று சிதைந்துவிட்டது. எனவே, இந்த பலவீனமான ஆட்சியை அகற்றி, மக்கள் நலன் சார்ந்த சஜித் பிரேமதாஸவின் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றார்.
மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA