கொழும்பு மாநகர சபையின் மில்லியன் கணக்கான வரி நிலுவை! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
2016 முதல் 2020 வரையான காலப்பகுதியில் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 1,040 மில்லியன் பெறுமதியான பெறுமதி சேர் வரி (VAT) நிலுவையை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுப்பதாக கொழும்பு மாநகர சபை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித்திணைக்கள ஆணையாளர் தாக்கல் செய்த முறைப்பாடு நவம்பர் 25ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகார மகரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மாநகர சபை சட்டத்தரணிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபை நிர்வாகம் தீர்மானம்
குறித்த வரி நிலுவையை செலுத்த மாநகர நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும், முறைப்பாட்டாளருடன் இணக்கப்பாட்டுக்கு வர எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மாநகர சபையின் கணக்காளர் சுகத் தர்மசூரியவை 1 மில்லியன் ரூபாய் தனிப்பட்ட பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவரை இடமாற்றம் செய்வதற்கு அல்லது வெளிநாடு செல்ல அனுமதிப்பதற்கு முன்னர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.