கப் வாகனம் மோதி யுவதி ஒருவர் மரணம்! நாவலவில் பாதசாரிக் கடவையில் சம்பவம்
கொழும்பு, மிரிகான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல வீதியில் திறந்த பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் 23 வயதுடைய யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பல்லேவெல பகுதியைச் சேர்ந்த யுவதியே களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாவல சந்தியிலிருந்து மிரிகானை நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று, பாதசாரிக் கடவையில் யுவதி ஒருவர் வீதியைக் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, ஜீப் வாகனத்துக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கப் ரக வாகனம் ஒன்று அந்த ஜீப் வாகனத்தின் பின்புறத்தில் பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலின் அழுத்தத்தால் ஜீப் வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து, பாதசாரிக் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற யுவதி மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி உடனடியாகக் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பாகச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் மற்றும் கப் ரக வாகனங்களின் சாரதிகள் இருவரையும் மிரிகான பொலிஸார் கைது செய்துள்ளமையுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.