இலங்கை வந்த அமெரிக்க பிரஜையின் கொடூரச் செயல்
அனுராதபுரத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர், மதுபோதையில் வீட்டு உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்த முயன்றதுடன் வீட்டின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தனது மகனுடன் சீகிரியாவை பார்வையிடச் செல்ல அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த 51 வயதான அமெரிக்க பிரஜை இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் வீடொன்றினை வாடகைக்கு எடுத்த குறித்த வெளிநாட்டவர், எதிர்வரும் 26ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்கர் அட்டகாசம்
இதன்போது, வீட்டு உரிமையாளரின் மகனுடன் சீகிரியாவை பார்வையிடச் செல்ல வேண்டும் என அந்த அமெரிக்கர் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அதற்கு உரிமையாளர் சம்மதிக்கவில்லை. வீட்டு உரிமையாளர் மறுத்ததால் கடுமையாக ஆத்திரமடைந்ததாக கூறப்படும் அமெரிக்கர் வீட்டை விட்டு வெளியே சென்று மது அருந்திவிட்டு மீண்டும் திரும்பியுள்ளார்.
இதன்போது மோசமாக நடந்துகொண்டதுடன் வீட்டின் சொத்துக்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளரைக் கத்தியால் குத்தவும் முயற்சித்துள்ளதுடன், அடிதடியிலும் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த குறித்த அமெரிக்கர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.