தனது தண்டனையை எதிர்க்க ஞானசாரருக்கு உள்ள உரிமை! விதிவிலக்கு அல்ல என அரசாங்கம் அறிவிப்பு
எந்தவொரு தனிநபரின் அதிகாரம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும். யாருக்காகவும் சட்டத்தை வளைக்கவோ அல்லது திருத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
கடந்த கால ஆட்சிகளில் அதிகாரம் படைத்தவர்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இடையில் சட்டம் பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிராகவே மக்கள் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அரசாங்கத்திற்கும் பெரும்பான்மை ஆணையை வழங்கினர்.
எனவே, அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமே அரசாங்கத்தின் பொறுப்பாகும். தனிப்பட்ட நபரின் அடையாளத்திற்காக அதில் விதிவிலக்குகளை அளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் பேரணி ஒக்டோபர் 15 அன்று கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்தது.

ஜனாதிபதி செயலகப் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, பிக்குகள் தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு புத்தசாசன அமைச்சுக்கு சென்றனர்.
அங்கு அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 4 பிக்குகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருக்கப் போவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தெரிவித்துள்ளனர்.