தென்னிலங்கையை உலுக்கிய இரு துப்பாக்கிச்சூடு: பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்
கம்பஹா, தம்மிட்ட பிரதேசம் மற்றும் ஜாஎல, மகேவிட்ட பிரதேசத்தில் நேற்று (06) இரவு இடம்பெற்ற இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு துப்பாக்கிச்சூடுகளையும் ஒரே சந்தேகநபர்கள் நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜா அல - மகேவிட்ட பகுதியில் நேற்று இரவு 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
போதைப்பொருள் வியாபாரம்
கம்பஹா பகுதியை சேர்ந்த 43 வயதான ரங்க ஜெயநாத் எனும் கே.ஜி என்ற நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் வியாபாரி தினேஷ் வசந்தவுக்கு நெருக்கமானவர் எனவும், ஏனைய போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கியமையே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமென சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்று அரை மணித்தியாலங்களுக்குள், நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கம்பஹா, தம்மிட பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சம்மில் அயந்த என்ற இளைஞரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
இவர் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட பல பொலிஸ் குழுக்களினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |