நிலக்கரி கொள்வனவு மோசடி! மொட்டு - சஜித் தரப்புகள் சபையில் கேள்வி
நிலக்கரி கொள்வனவுக்குரிய சர்வதேச விலைமனுகோரல் தொடர்பில் மொட்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்த கருத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கிண்டலாக பதில் வழங்கியுள்ளார்.
டி.வி.சானக பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என கூறியபோது, ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய அஜித் பி பெரேரா, “ தாங்கள் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான மோசடி தொடர்பில் குறிப்பிடுகின்றீர்கள், பொறுப்புடனான இதனை குறிப்பிடுகின்றீர்கள். ஊழலுக்கு எதிரான இந்த அரசாங்கம் அவ்வாறு செயற்படுமா' என கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சானக,
சர்வதேச விலைமனுகோரல்
''நிலக்கரி கொள்வனவுக்குரிய சர்வதேச விலைமனுகோரலுக்கான 06 வார காலம் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக 05 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பாரிய மோசடி இடம்பெறும். ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பாரிய ஊழல் மோசடிக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் சர்வதேச விலைமனுகோரல் தொடர்பில் பிரத்தியேக வழிகாட்டல் உள்ளன.
ஏதேனும் விலைமனு கோரல் செய்வதாயின் அந்நடவடிக்கைகளை மேற்கொண்ட விலைமனுகோரல் செய்பவர்களுக்கு 06 வாரங்கள் வழங்கப்பட வேண்டும். நிலக்கரி கொள்வனவுக்கான சர்வதேச விலைமனுகோரல் தொடர்பில் அண்மையில் அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 06 வார காலம் 05 வாரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வலுசக்தி அமைச்சு தேசிய பெறுகை ஆணைக்குழுவிடம் ' 05 வாரங்கள் போதாது,நாட்டில் நிலக்கரி தீர்ந்து விடும் ஆகவே வாரத்தை 03 வாரமாக குறைத்து தாருங்கள் ' என்று கோரியுள்ளது.
சர்வதேச விலைமனுகோரல் முதன்முறையாக 03 வாரத்தில் முடிவடையவுள்ளது. ஏன் உரிய காலத்தில் விலைமனுகோரல் செய்யவில்லை. கடந்த அரசாங்கம் நிலக்கரி கொள்வனவின் போது மோசடி செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டினீர்கள்.
ஆனால் தற்போது அதே நிறுவனத்துக்கு நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களுக்கு விலைமனுவை வழங்குவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




