இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக முதலமைச்சர் விஜயின் முக்கிய அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணைப் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 148 வீடுகளை இன்று (நவம்பர் 26, 2026) காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய்
இதற்காக 8.52 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வீடுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக 1.37 கோடி இந்திய ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 பேருக்கான அதிகரிக்கப்பட்ட மாதாந்த நிதியுதவித் திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதற்கமைய, குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்த நிதியுதவி 1,500 ரூபாயிலிருந்து 1,800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கான நிதியுதவி 1,000 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும், 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான நிதியுதவி 500 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசாங்கம்
இந்த நிதியுதவி அதிகரிப்பினால் தமிழக அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் மேலதிகமாக 14.95 கோடி இந்திய ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு, தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் சந்திப்பு இதற்கிடையில், இந்தியாவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன், சென்னையிலுள்ள அவுஸ்திரேலிய துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரும் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துள்ளனர்.
மேலும், தக்ஷிணசித்ரா அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் பணிப்பாளர் டெபோரா தியாகராஜன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மேலதிக தகவல் - இந்ரஜித்

