கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் வெளிவரும் புதிய தகவல்கள்
கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான் சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெஹிவளை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தென் மாகாண பாதாள உலக உறுப்பினர்கள் அடையாளம்
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருலர் சிங்கப் படைப்பிரிவில் பணியாற்றிய முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், மற்றைய இரு சந்தேகநபர்களும் தென் மாகாண பாதாள உலக உறுப்பினர்கள் எனவும் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பிரான்சில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானின் உத்தரவின் பேரில் டுபாயில் பதுங்கியிருக்கும் லொகு பட்டி உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கிளப் வசந்தவின் கொலையை திட்டமிட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மற்றைய நபர் பாணந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
12 சந்தேகநபர்கள் கைது
இதேவேளை, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் பெரேராவை இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் லக்ஷ்மி சூரிகே கருணாசேகர உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மேலும் மூன்று சந்தேகநபர்களை 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |