கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பாதாள உலக குழுக்கள் விடுத்துள்ள அச்சுறுத்தல்
கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்ற நிலையில் அந்த இடத்தில் மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகத் தலைவரின் புகைப்படம் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, தெரிவித்துள்ளார்.
மகரகம கொதிகமுவ மயானத்திற்கு முன்பாக உள்ள சுவரிலேயே மாகந்துரே மதுஷின் புகைப்படம் அடங்கிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
“நமது தலைவர் ஒவ்வொருவரையும் இவ்விடத்திற்கு அனுப்புவார்'' என்று அதில் குறிப்பிட்டு KPI என்ற மூன்று ஆங்கில எழுத்துகள் எழுதப்பட்டிருந்ததாக பாதுகாப்பு பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரான்
இந்த சம்பவத்தின் பின்னர் மஹரகம மற்றும் தெமட்டகொட பிரதேசத்தில் பாதாள உலக குழுக்களுக்கு இடையில் அச்சுறுத்தல் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டு வருவதாக நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் மஹரகம பமுன்வ தொடருந்து நிலைய வீதியில் உள்ள மதுஷின் மனைவியின் வீட்டுக்கு அருகில் “மதுஷ் சென்ற இடத்திற்கு பாதாள உலகில் உள்ள அனைவரும் தயாராகுங்கள்” மற்றும் “கஞ்சிப்பானை இம்ரானின் குடும்பத்துக்கும் அதே தண்டனை” என இரண்டு சிறிய சுவரொட்டிகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலிலும் தெமட்டகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையிலும் ஒரே மாதிரியாக எழுதப்பட்ட இரண்டு அச்சுறுத்தல் குறிப்புகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, அச்சுறுத்தும் வகையிலான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மற்றும் அவற்றை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் மஹரகம மற்றும் தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |