பருவநிலை மாற்றம் ஒரு வாழ்வாதார அச்சுறுத்தல்: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஐநா பொதுச்சபை ஆதரவு
பருவநிலை நெருக்கடி மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வ பொறுப்பு உலக நாடுகளுக்கு உண்டு என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்கு, ஐநா பொதுச்சபை (UNGA) தனது அதிகாரப்பூர்வ ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான உறுப்பு நாடுகள், அதாவது 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
28 நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஈரான், பெலாரஸ், லைபீரியா மற்றும் ஏமன் ஆகிய 8 நாடுகள் இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
வனுவாட்டு நாட்டின் வரலாற்று வெற்றி பருவநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவின் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ரால்ப் ரெகென்வனு இந்த வாக்கெடுப்பை வரவேற்றுள்ளார்.
இது பருவநிலை நெருக்கடியின் முன்னணியில் இருக்கும் விளிம்புநிலைச் சமூகங்களுக்கான வெற்றி என்று அவர் வர்ணித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
"பருவநிலை மாற்றம் என்பது வெறும் அரசியல் மற்றும் பொருளாதார சவால் மட்டுமல்ல; அது சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விஷயம் என்பதை சர்வதேச சமூகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

நமது பூமியையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க வேண்டிய கடமைகளுக்கு அப்பாற்பட்டது எந்தவொரு நாடும் அல்ல என்பதை இந்தத் தீர்மானம் உணர்த்துகிறது" என ரால்ப் ரெகென்வனு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் த ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பருவநிலை மாற்றத்தை ஒரு 'வாழ்வாதார அச்சுறுத்தல்' என அறிவித்து, நாடுகளுக்குச் சட்டப்பூர்வக் கடமைகள் உண்டு எனத் தீர்ப்பளித்தது. 2023 மார்ச் மாதத்தில் வனுவாட்டு தலைமையிலான கூட்டு முயற்சியால் ஐநாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மீது சட்டப்பூர்வக் கடமைகளைச் சுமத்தக் கூடாது என அமெரிக்கா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது.
இந்தத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு வனுவாட்டு நாட்டிற்கு அமெரிக்கா தூதரக ரீதியாக அழுத்தம் கொடுத்த போதிலும், தற்போது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் ஐநாவில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
இதுகுறித்து அவுஸ்திரேலியாவின் பருவநிலை பேரவையைச் சேர்ந்த வெஸ்லி மோர்கன் கூறுகையில், புதைபடிவ எரிபொருட்களை அதிகம் பயன்படுத்தும் வல்லரசு நாடுகள் இதுவரை பருவநிலை நடவடிக்கைகளைத் தங்களின் அரசியல் விருப்பமாக மட்டுமே கருதி வந்ததாகவும், ஆனால் அது நாடுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய 'சட்டப்பூர்வக் கடமை' என்பதை ஐநா பொதுச்சபை தற்போது திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.