வடமாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தெளிவுபடுத்தல் அறிக்கை
வடமாகாண ஆளுநரின் உண்மைக்குப் புறம்பான ஊடக அறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டு சபை ஆகியவற்றில் ஏற்பட்ட குழப்பகரமான தகவல்கள் குறித்து வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரனிடம் அறிக்கை கோரப்பட்டது.
இந்தநிலையில், வடமாகாண கல்விப்பணிப்பாளரால் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பான தகவல்
குறித்த அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களுடன், அரசார்பு ஜே.வி.பி தொழிற்சங்கத்துடன் இணைந்து வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளும் - ஆசிரியரைப் பழிவாங்கி வரும் முயற்சிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
அவற்றை இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். 18.08.2025 அன்று விசேட மேன்முறையீட்டு சபைக் கூட்டம் நடத்தப்பட்டு 2024/2025 ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய மேன்முறையீடுகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த தீர்மானத்தின் அடிப்படையில், விசேட மருத்துவக் காரணங்கள், தங்கிவாழ்வோர் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு பலரது இடமாற்றங்களும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. யா/அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தனது மேன்முறையீட்டில் பின்வரும் விடயங்களை தெளிவுபடுத்தி மேன்முறையீடு செய்திருந்தார்.
வடமாகாண கல்வியமைச்சின் NP/3/1/4/Gra – 2008/0097 இலக்க 2008.11.20 ம் திகதிய கடிதம் மூலம் 2008.11.24 ம் திகதி முதல் செயற்படும் வகையில் யாழ்.வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்துக்கு சங்கீத பாட பட்டதாரி ஆசிரியராக முதல் நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பாகவும் - 12.02.2010 – 23.02.2012 வரை வெளிமாவட்ட சேவைக்கு ஒத்ததாக கருதப்பட்ட வடமராட்சி கிழக்கில் தான் பணியாற்றியுள்ள விடயத்தையும், தனது கணவரின் பார்வை செயலிழப்பு காரணமாக முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து, அவரது கணவரின் மருத்துவ அறிக்கைகள் ஆராயப்பட்டு - கௌரவ ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் அறிவுறுத்தலுக்கமைய, வடமாகாண இடமாற்றச் சபையின் அங்கீகாரம் பெற்று 2012.02.24 ம் திகதி நியமன அதிகாரியான வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் - தனது பராமரிப்பிலுள்ள தனது 85 வயது முதிர்ந்த பாரிச வாத நோயினால் தாக்கப்பட்டு படுக்கையில் உள்ள தனது தாயாரின் நிலை குறித்து- கிராமசேவையாளர் மற்றும் பிரதேச செயலாளராலும் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் தனது மேன்முறையீட்டில் இணைத்து தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு இடமாற்ற மேன்முறையீடு செய்திருந்தார்.
ஆசிரியரது மேன்முறையீடு
குறித்த ஆசிரியரது மேன்முறையீடு, 18.08.2025 ம் திகதிய விசேட மேன்முறையீட்டு சபையில் பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது கணவரின் கண்பார்வை குறைபாடு தொடர்பான மருத்துவ சான்றின் இற்றைப்படுத்தப்பட்ட ஆவணத்தை பெற்ற பின்னர் குறித்த ஆசிரியரது இடமாற்றத்தை, ஆசிரியரது மேன்முறையீட்டு கோரிக்கைக்கு அமைவாக இரத்துச் செய்யவது என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் - இடமாற்ற விசேட மேன்முறையீட்டு சபை தீர்மானத்தில் ‘Should submit proof to Verify husband depends on the Appleant due to visual impairment’ என தெளிவாக குறிப்பிட்டப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்தில் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட விசேட மேன்முறையீட்டு சபையின் இடமாற்ற சபை அங்கத்தவர்கள் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனர். (குறித்த ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது) அதற்கமைவாக, குறித்த ஆசிரியை தனது கணவர் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைக்கு சென்று வரும் தனியார் நிறுவனமொன்றின் தொழில் நுட்பட்பவியலாளரால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை 19.09.2025 அன்று சமர்ப்பித்திருந்தார். குறித்த ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு ஒரு மாத காலமாக எந்தவொரு தீர்மானமும் வடமாகாண கல்வி திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் _ 2025.09.12ம் திகதிய கடிதம் மூலம் குறித்த ஆசிரியை இடமாற்றத்தில் விடுவிக்குமாறு, பாடசாலையின் அதிபருக்கும் குறித்த ஆசிரியருக்கும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளரால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆயினும் -மேன்முறையீட்டு முடிவு வடமாகாண கல்வி திணைக்களத்தால் அறிவிக்கப்படாமலேயே, குறித்த ஆசிரியை முறையற்ற விதமாக தொடர்ந்தும் பழிவாங்கப்படுவதால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவராகிய ஆ.தீபன் திலீசன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரான திரு.பற்றிக் டிரஞ்சனிடம், குறித்த ஆசிரியையினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் முடிவு எதுவும் அறிவிக்கப்பட்டிராத நிலையில், யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் மூலம் அவர் கடைமையாற்றும் பாடசாலையில் கையொப்பமிடுவதைத் தடுப்பது மிக மோசமான பழிவாங்கும் செயற்பாடு என்பதை தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர், குறித்த ஆசிரியை யா/அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்திலேயே தொடர்ந்தும் கையொப்பமிட அனுமதிக்குமாறு பாடசாலையின் அதிபருக்கு யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரால் 2025.09.19 ம் திகதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
ஆளுநரின் ஊடக அறிக்கை
இதேவேளை –யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரால் குறித்த அறிவித்தலை அதிபருக்கு வழங்கியிருந்த அதேநாளில் - குறித்த ஆசிரியரால் வழங்கப்பட்டிருந்த மருத்துவ இற்றைப்படுத்தல் கடிதம் தொழில்நுட்ப உத்தியோகத்தரால் வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் இடமாற்றத்தை, விசேட மேன்முறையீட்டு சபையின் தீர்மானத்துக்கமைவாக இரத்துச் செய்வதற்கு, கண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரால், உறுதிப்படுத்திய ஆவணத்தை வழங்குமாறு வடமாகாண கல்வித்திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. பிறட்லீ அவர்களினால் 0771489754 இலக்க தொலைபேசியூடாக குறித்த ஆசிரியைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் - ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் - 23.09.2025 அன்று இடமாற்ற சபையிலும் எமது தொழிற்சங்க உறுப்பினர் கலந்து கொண்டதாகவும், அதன் பின்னரே மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கமைக்கமைய குறித்த ஆசிரியையுடன் தொலைபேசி வாயிலான உரையாடியதன் அடிப்படையில் கண் மருத்துவரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டு அக்கடிதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்றும் பொய்யானதும் புனையப்பட்டதுமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியையுடன் தொலைபேசி வாயிலாக திணைக்களத்தினர் உரையாடிய திகதி 19.09.2025 திகதி பி.ப 1.36 மணி ஆகும். (தொலைபேசி ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.) அத்துடன் கண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ சான்றையும் பெற்று, 2025.09.22ம் திகதியன்றே வடமாகாண கல்வித்திணைக்களத்துக்கு வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.ஆனால் வடமாகாண ஆளுநரின் அறிக்கையில் பொய்யுரைக்கப்பட்டுள்ளது.
எனவே - இடமாற்ற மேன்முறையீட்டு சபையின் தீர்மானத்துக்கமைவாக, வடமாகாண கல்வித் திணைக்களம் கோரிய ஆவணங்கள் அனைத்தும் குறித்த ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், அன்றைய தினம் வடமாகாண ஆளுநர் தலைமையில் ஜே.வி.பி தொழிற்சங்கத்துக்கும், வடமாகாண கல்வி அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பில், ஜே.வி.பி. ஆசிரியர் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தற்போது பிரதியமைச்சராகவும் உள்ள மகிந்த ஜெயசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக, குறித்த ஆசிரியையின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
சட்ட ரீதியான ஏற்பாடு
இதனடிப்படையில், விசேட மேன்முறையீட்டு சபையில் குறித்த ஆசிரியையின் மேன்முறையீடு தொடர்பான தீர்மானத்தை மாற்றுவதற்கு வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளும் ஜே.வி.பி.தொழிற்சங்கத்தினரும் முயற்சித்தனர்.
இலங்கை சோசலிச குடியரசின் அரசாங்க தாபன விதிக்கோவை மற்றும் 2007/20 இலக்க தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை, வடமாகாண ஆசிரியர் இடமாற்ற கொள்கை ஆகியவற்றுக்கு முரணாக ‘விசேட மேன்முறையீட்டு மீளாய்வு சபை’ என்ற போர்வையில் குறித்த ஆசிரியையின் மேன்முறையீட்டை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று பழிவாங்கும் நோக்குடன் 2025.09.24 ம் திகதியன்று முயற்சிகள் இடம்பெற்றிருந்தன.
ஆயினும், ஒன்றுக்கு மேற்பட்ட சட்ட ரீதியான ஏற்பாடுகளும், மனிதாபிமான காரணங்களுமாக பல இருந்தும் குறித்த ஆசிரியை வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டுள்ளார் என்பதே உண்மையாகும்.
குறித்த வெளிப்படையான உண்மைகள் அனைத்தையும் மறைத்து - தமது அரசியல் பழிவாங்கல் நோக்கங்களை மறைத்து – தமது சட்டவிரோதமான, அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் அனைத்தையும் மறைத்து, வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வடமாகாண ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே – எமது இந்த ஊடக அறிக்கை மூலம் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் வெளியிடப்பட்ட பொய்யானதும் புனையப்பட்டதுமான அறிக்கையின் உண்மை நிலையையும், ஜே.வி.பியின் அரசு சார்பு ஆசிரிய தொழிற்சங்கத்தினால் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் என்பதற்காக குறித்த ஆசிரியர் பழிவாங்கப்பட்டுள்ள விடயத்தையும் அறியத்தருகின்றோம் என்றுள்ளது.



