அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் (Photos)
தற்போது நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு ஆர்பாட்டங்களை முன்வைத்துள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கும் நிலை தற்பொழுது வரை இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வடகிழக்கு மற்றும் மலையக மக்கள் அதிகளவு அசொளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அப்பகுதி மக்களால் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
வவுனியா
வவுனியா- பூனாவ பகுதியில் அமைந்துள்ள எரிவயு விநியோகத்தர் வளாகத்தில் சமையல் எரிவாயு வழங்குவதில் குழப்பநிலையடுத்து மக்கள் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் மாவட்ட முழுவதும் விநியோகிப்படுவதுடன் தற்போது எரிவாயு தட்டுப்பாட்டையடுத்து குறித்த எரிவாயு விநியோகத்தர் வளாகத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த விநியோக இடத்தில் இன்று (08) காலை வரிசையில் மக்கள் காத்திருந்த போதிலும் 9.30 மணியளவில் எரிவாயு நிறைவடைந்துள்ளமையினால் இன்று விநியோகிக்கப்படமாட்டது என நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஏ9 வீதியில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்ததுடன் குறித்த இடத்திற்கு ஈரப்பெரியகுளம் பொலிஸார் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடி மக்களை வெளியேற்றினர்.
இதனையடுத்து 20 நிமிடங்களின் பின்னர் ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் அவ்விடத்தில் பொலிஸாரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா
நுவரெலியா - வலப்பனை கல்வி வலய பாடசாலைகளின் கல்வி சமூகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இராகலை பிரதேச பொது மக்கள் இணைந்து அரசுக்கு எதிராகவும், இன்று மக்கள் எதிர்நோக்கும் வாழ்க்கை பிரச்சினை தொடர்பாகவும் இராகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இராகலை பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கூடிய கல்வி சமூகத்தினர், மற்றும் பொதுமக்கள் தலையில் கோ கோட்டா ஹோம் என கறுப்பு பட்டி அணிந்து, போலிங் அராஜகத்தை நிறுத்து, மக்கள் அதிகாரமே வெல்க, வக்கற்ற அரசே வாய் கிழிய பேசாதே, அரச அராஜகத்தை உடனே நிறுத்து, கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கே திருப்பி கொடு, தள்ளாதே தள்ளாதே பட்டினி சாவுக்கு தள்ளாதே, கள்ளனே வெளியேறு காயப்பட்டவர்களின் கூக்குரல் இது, மந்திகள் ஆட்சி மந்த ஆட்சி, என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி போராட்ட பேரணியை முன்னெடுத்தனர்.
மன்னார்
மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை இல்லாத போதிலும் மண்ணெண்ணை யை பெறுவதற்காக பெண்கள் சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் உச்சி வெயிலிலும் காத்திருக்கும் அவல நிலை மன்னாரில் காணப்படுகின்றது.
இன்று அதிகாலை 6 மணி முதல் மன்னார் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு என நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை இல்லாத நிலையிலும் அதை பெறுவதற்காக மக்கள் கேண்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும் டீசல் தட்டுப்பாடு தொடர்ச்சியாக காணப்படுகின்றமையினால் மன்னார் கச்சேரி தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையம் வரை வாகனங்கள் நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
அதே நேரம் எரிபொருள் மற்றும் எரிவாயு மின்சாரம் போன்ற சேவைகளை இவ் அரசாங்க தடையின்றி வழங்க கோரியும் இல்லை என்றால் ஆட்சியை விட்டு வெளியேற கோரியும் இளைஞர் குழு ஒன்றும் அப்பகுதியில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹட்டன்
விலையுயர்வுக்கும் அரச செயப்பாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் இன்று(08) அரச ஊழியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அத்தியவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (8) பகல் உணவு ஓய்வு நேர வேளையில் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்வி துறைசார்ந்த ஊழியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள்,டிக்ககோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தாதியர்கள்,வைத்தியர்கள் சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி மற்றும் ஏனைய அரச ஊழியர்கள்களின் ஆர்ப்பாட்டம் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு முன்பாக ஆரம்பித்தது ஆர்ப்பாட்டகாரர்கள் உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே,பசிக்கு நிறம்,மதம் கிடையாது,விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம்,ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள்,சிற்றூழியர்கள் உட்பட வைத்தியசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் டீசல் இல்லை,கவலைக்கிடமான நிலையில் இலவச சுகாதார சேவை, சுகாதார சேவையை பாதுகாப்போம்,பிள்ளைகளின் கல்வியினை பாதுகாப்போம். போன்ற வாசகங்களை எழுத்திய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம், கோசமிட்டனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு அரச ஊழியர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள.; முதியவர்களை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு நாளுக்கு நாள் விலை அதிகரித்து சென்றால் எவ்வாறு இந்த சம்பளத்தில் உயிர்வாழ்வது எதிர்கால சமூதாயத்திற்காவது நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்.
அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும் பொறுப்பு கூற வேண்டும் அவர்கள் இந்த பிரச்சினையினை இழுத்தடித்து தங்களது சுய தேவையினை நிறைவேற்றிக்கொள்ளாது நாட்டு மக்களின் நிலையினை உணர்ந்து செயப்பட வேண்டும் என ஒருவர் தெரிவித்தார்.
மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த அரசாங்கம் நாட்டு மக்களை பற்றி ஒரு துளியளவு கூட சிந்திக்காது செயப்படுகின்றது உயிர் காக்கும் மருந்துகள் இன்னும் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளது.
இதனால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனவே இதற்கு அரசாங்கம் முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பருத்தித்துறை
நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய கொழுத்தும் வெயிலிலும் மக்கள் கூட்டம்.
பருத்தித்துறை சதோசா விற்பனை நிலையத்தில் நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொழுத்தும் வெயிலிலும் வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஒரு நபருக்கு மூன்றுகிலே அரிசி, ஒருகிலே சீனி, ஒருகிலோ பருப்பு என்பனவே நியாய விலைக்கு விற்க்கப்படுகின்றன.
இதனை பெறுவதற்க்கே மக்கள் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர். கோதுமை மாவு முடிவடைந்துள்ளதானால் அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களின் பின் இன்று பொருட்கள் விநியோகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி,
ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசங்களிலும் இவ்வாறான அசாதாரண நிலை காணப்படுவதுடன், இன்று இப்பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்களும் முச்சக்கர வண்டிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் எரிவாயு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, இப்பாதையால் கல்முனை நோக்கிப் பயணித்த எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய லொறியை மறித்த பொது மக்கள் தமக்கு எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அசாதாரண நிலையினைக் கருத்திற்கொண்டு வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் எரிவாயு வினியோக நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் நாளை (09) சனிக்கிழமை இப்பிரதேச மக்களுக்கு 300 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலின் போது வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, ஏ.எல்.ஏ.கபூர், முன்னாள் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எல்.ரீ.எம்.புர்க்கான், சட்டத்தரணி ஹபீப் றிபான் எனப்பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் மற்றும் பிரமுகர்களின் தலையீட்டினால் மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது புனித நோன்பு காலம் என்பதனால் எரிவாயுத்தட்டுப்பாட்டினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருவதனைக் கருத்திற்கொண்டு மேலதிகமான எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கவும் அது மக்களுக்கு உரிய முறையில் கிடைக்கவும் எரிவாயு நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனால் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய துப்பாக்கி நிலை உருவாகியுள்ளதுடன், பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மக்களை மென்மேலும் சிரமத்துக்குள்ளாக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு
அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பொதுமக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்து இன்று மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 50-ஆவது சபை அமர்வானது இன்று போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வில் 49 அமர்வின் கூட்டறிக்கை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போரதீவுப்பற்றில் இயங்கும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் சாதாரண மக்களுக்கு எரிபொருளை வழங்காமல் வசதி படைத்தவர்களுக்கு வழங்குவது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
அத்துடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார பிரச்சினைக்கு எதிராக கவனிப்பு போராட்டத்தினை சபையில் முன்னெடுத்தனர். இது தொடர்பில் சபையில் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதில் தமிழர் ஐக்கிய சுதந்திரக்கட்சியின் சுயேட்சைக்குழு உறுப்பினர்
சு.விக்கினேஸ்வரன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
