சீ.ஐ.டி. அதிகாரிகள் என கூறி போலி அடையாளத்துடன் அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு - பன்னிபிட்டிய(Colombo - Pannipitiya) பிரதேசத்தில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரை சீ.ஐ.டி. அதிகாரிகள் என்று போலி அடையாளத்துடன் அச்சுறுத்திய இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பன்னிப்பிட்டிய, வீர மாவத்தையில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்களை, தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள (சீ.ஐ.டி) அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மூன்று நபர்கள் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்துவந்த தம்பதியரை பிரிந்து செல்லுமாறு குறித்த பெண்ணின் தந்தை சில காலம் அழுத்தம் கொடுத்துவந்துள்ளார். பெண்ணின் தந்தை பல சந்தர்ப்பங்களில் தமது மகளின் கணவனை மிரட்டி துன்புறுத்தியதால் அவர் துபாய் சென்றுள்ளார்.
சீ.ஐ.டி விசாரணை
இந்நிலையில், துபாயில் இருந்து நாடு திரும்பியதும் மீண்டும் இருவரும் வீர மாவத்தையில் உள்ள வீடொன்றில் குடியேறியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என கூறிக்கொண்டு சிலர் வீட்டிற்கு வந்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக தனது மகன் மீது குற்றம் சுமத்தி தம்மை அச்சுறுத்தியதாக அந்த நபரின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
அதே நேரம் , குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினர் தமது மனைவியின் தந்தையின் நண்பர்கள் என அச்சுறுத்தலுக்கு உள்ளான நபரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்கள பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் ஒருவர் துறைமுக அதிகாரசபையின் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
ஏனைய இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட துறைமுக அதிகாரசபையின் ஊழியர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பில் உள்ள, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரு அதிகாரிகளிடமும் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், குறித்த இரண்டு அதிகாரிகளின் சேவையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |