புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா மேற்கொண்டுள்ள புதிய திட்டம்
பிரித்தானியா புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதைப் போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கு வரமுடியாது.
திட்டமிட்ட மற்றொரு நாடு
இந்நிலையில், ருவாண்டாவைப் போலவே, மற்றொரு நாட்டுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்ட மற்றொரு நாடாக ஈராக் காணப்படுகிறது. பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே இருந்தது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம். ஆனால், ஈராக்குக்கோ, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவதுதான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |