திருக்கோவில் இந்து மயானத்தில் இனியபாரதியின் சகாவுடன் சிஐடி சோதனை..!
அம்பாறை - திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பிலுவில் இந்து மயானத்தில் இன்று குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கருணாக்குழுவின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த கல்முனை அலுவலக பொறுப்பாளராக இருந்த நபர் அழைத்து செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது அவரை கல்முனை நகரில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.
அதிரடி கைதுகள்
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு அதிகாரிகள் தம்பிலுவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் பாடசாலை வீதியில் 2004ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனிய பாரதியின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப் வண்டிகளில் அழைத்து வந்து சோதனையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







