நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நத்தார் தின கொண்டாட்டங்கள் (video)
நத்தார் யேசுப்பாலன் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் நாடளாவிய ரீதியில் பெரும்பாலான தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில் யாழ். மரியன்னை பேராலயத்தில், யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்சகோதர்களினால் கூட்டுத்திருப்பலி நடைபெற்றுள்ளது.
இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடியுள்ளனர்.
உலகம் முழுவதும் இன்றைய தினம் நத்தார் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.
நத்தார் கொண்டாட்டம்
நத்தார் கொண்டாட்டம் ஏற்கனவே பல நாடுகளில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் பூமியில் அவதரித்த யேசுபாலன் மகிமையையும், அவர் எதிர்காலத்தின் மக்களுக்கான நெறிப்படுத்தி விட்டுச்சென்ற மகத்துவமான பணிகளின் முக்கியத்துவம் பற்றி யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார் (யோவான்1:1-14) என்ற யோவான் நற்செய்தியாளரின் வார்த்தைகள் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையைத் தெளிவாகத் வெளிப்படுத்துகிறது.
கடவுள் என்றும் நம்மோடு இருக்கிறார் என்ற இந்த உண்மையையும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வையும் நம்பிக்கையையும் அர்த்தத்தையும் எமது எந்தத் துன்பமான காலநிலையும் இக்கட்டான அனுபவமும் என்றும் குறைத்துவிடவோ எடுத்து விடவோ முடியாது.
நீங்கள் உங்கள் ஆலயங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிவும் அமைக்கும் கிறிஸ்து பிறப்பைச் சித்தரிக்கும் கிறிஸ்மஸ் குடிலும் அதனோடு இணைந்த கிறிஸ்மஸ் மரமும் மின் விளக்குச் சோடனைகளும் நடத்தும் ஒளி விழாக்களும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையான நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
மன்னார்
இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையிலும் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்துள்ளனர்.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நத்தார் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நத்தார் திருப்பலியில் ஆயரொருவர் உரையாற்றுகையில்,
இந்த காலகட்டத்தில் இலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியின் போது எமது மக்கள் துன்பப்படுகிறார்கள்.
விலைவாசி அதிகரித்து இருக்கும் வேளையில் எத்தனையோ பொருட்களை வாங்க முடியாத நிலையிலும் சில பொருட்களை எப்படியும் தேடிக் கொள்ள இயலாத நிலையில் சில வீடுகளிலே ஒரு வேலைக்கு கூட சாப்பிட இல்லாமல் பட்டினியாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் நிறைவாக இருந்து அதிலிருந்து அவர்களை சூழ இருக்கும் இந்த இருள் அகற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிறக்கும் இயேசு எமக்கு உதவி புரிவார் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்.
இயேசுநாதர் பிறந்தது ஒரு மாட்டு தொழுவத்தில். அவர் பிறக்கும் போது அவருக்கு பெரிய மாளிகை இருக்கவில்லை.ஒரு பெரிய வீட்டில் கூட அவர் பிறக்கவில்லை. ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழையாகத்தான் அவர் பிறந்தார்.
ஆகையால் தான் அவர் ஏழைகளுக்கும் வரியோருக்கும் ஓரங்கட்டப்பட்ட வர்களுக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் மன்னார் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருவிழா திருப்பலி பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இயேசு பிறப்பின் திருவிழா திருப்பலி இடம்பெற்றுள்ளது.
செய்திகள்: ஆஷிக்
மலையகம்
மலையகத்தில் மக்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மலையகத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கிஷாந்தன்
மட்டக்களப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 17வது ஆண்டு நினைவினை முன்னிட்டு படுகொலைசெய்யப்பட்ட தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு ஆராதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யேசு கிறிஸ்துவின் பிறப்பினை குறிக்கும் வழிபாடுகள் நேற்று (24.12.2022) மாலை நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் யேசு கிறிஸ்த்து பிறப்பின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமார்
கிளிநொச்சி
இந்நிலையில் கிளிநொச்சியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் உள்ள அரசியல் பொருளாதார ஸ்தம்பி தங்கள் அகன்று, நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என மக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையில் வணக்கத்துக்குரிய கர்த்தரின் திருப்பலியை ஒப்புக் கொடுத்துள்ளார்.
வவுனியா
வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்றுள்ளது.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த மக்கள் நத்தார் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம்
புத்தளத்தில் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் புத்தளம் அன்னை சாந்த மரியா ஆலயத்தில் நேற்று (24.12.2022) நத்தார் ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஆலய அருட்தந்தை பயார்ஸ் கெனடி பெர்னாண்டோவின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நத்தார் கொண்டாட்டத்தின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் நினைவு தினம் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
