சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் அதிரடி அறிவிப்பு
ஏனைய மதங்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மீண்டும் இலங்கைக்கு வருவது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போதகரின் பதிவு
அந்த பதிவில், “வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயணங்களில் ஈடுபட்டு வருகிறேன், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியது.
பெர்னாண்டோவுக்கு எதிராக பயண தடை
மேலும் அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டு சென்றுள்ளார் என்றும் விரைவில் வேறொரு இடத்திற்கு செல்வார் என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையிலே அவர் தற்போது மீண்டும் இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை குற்றப் புலனாய்வு பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலதிக தகவல்-சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |