இந்து சமுத்திரத்தில் ஆய்வு நடவடிக்கையில் சீன கப்பல்
சீனாவின் Yuan Wang 5 ஆய்வு கப்பலின் நடவடிக்கைகள் தொடர்பில் மீண்டும் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சீனாவின் Yuan Wang 5 அதிதொழில்நுட்ப கண்காணிப்பு ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தை ஆய்வு செய்து வருகின்றது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த கப்பல், சீனாவிலுள்ள ஜியாங்யின் துறைமுகத்துக்கு நேரடியாகச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்து சமுத்திரத்தில் ஆய்வு
எனினும், அம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் ஆய்வு செய்து வருகின்றது எனவும் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் சீனக் கப்பல் நிலைகொண்டு, ஆய்வில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனக் கப்பல், ஜியாங்யின் துறைமுகத்துக்குச் செல்லுமா அல்லது வேறு நாட்டின்
துறைமுகத்துக்குச் செல்லுமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.