இலங்கையில் தரித்து நின்ற சீன கப்பல்! மூன்று செய்மதி மூலம் கண்காணித்த இந்தியா - வெளிவரும் தகவல்கள்
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்த யுவான் வாங் 5 என்ற சீனாவின் அதி நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய உளவு கப்பல் நேற்று துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
கப்பலை கண்காணித்த மூன்று செய்மதிகள்
யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் இந்தியா மூன்று செய்மதிகள் மூலம் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
கப்பலில் இருந்து செய்மதிகளை கண்காணிக்கும் போது அதன் சமிக்ஞை கட்டமைப்புக்கு இந்திய செய்மதிகள் மூலம் சில தடைகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் இந்தியா விண்ணில் நிலை நிறுத்தியுள்ள GSAT-7, EMISAT மற்றும் RISA ஆகிய செய்மதிகள் ஊடாக சீன கப்பல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசித்த நாளில் இருந்து செயற்பாடுகளை கண்காணித்த இந்தியா
யுவான் வாங் 5 கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இருந்து அதன் செயற்பாடுகளை இந்த செய்மதிகள் மூலம் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்ததுடன் நேற்றைய தினம் வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருந்தது.
சீனாவின் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியா, அமெரிக்க ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தன.