கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வது குறித்து கட்டமைப்பை உருவாக்க அழைப்பு
இந்தியாவும் இலங்கையும் கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து புதிய "கட்டமைப்பை" உருவாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன கண்காணிப்புக்கப்பல் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கிய கொழும்பின் முடிவின் மீது இந்தியாவின் அதிருப்திக்கு மத்தியிலேயே மிலிந்த மொரகொட இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 16ம் திகதி சீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை துறைமுகத்துக்கு வந்த நிலையில் 22ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்திய,இலங்கையுடனான உறவில் விரிசல்
இந்த நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரின் தரப்புக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டதாக மொரகொட இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறியாகவே, இலங்கைக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு கடந்த வியாழன் அன்று அறிவுறுத்தல்களை வெளியிட்டது.
இது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடாத மிலிந்த மொரகொட, இந்திய-இலங்கை ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்கால உறவுகளை பார்ப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சீன கப்பல் அனுமதி
சீன கப்பலை அனுமதித்தமையானது, பாரிய பிரச்சினை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும், நம்பிக்கையின்மைக்கு இடமளிக்காமல் இருப்பதற்கும் உரிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆட்சேபனைகளுக்குப் பின்னர், கப்பலின் வருகையை முழுமையாக ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் சீனாவிடம் கேட்டுக் கொண்டாலும், சீன அரசாங்கம் ஹம்பாந்தோட்டைக்கு வருவதை சில நாட்கள் தாமதிக்க மாத்திரம் ஒப்புகொண்டது.
சீன கப்பலுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட விடயத்தில் போதுமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை மொரகொட ஏற்றுக்கொண்டார்.
இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை
இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை ஒன்று நிலவுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், கப்பல்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு இடையில் வேறுபாடு காண்பதில் கொழும்பில் ஒரு குழப்ப நிலை இருந்திருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், அவற்றைத் திரும்பப் பெறுவது கடினமாக இருந்தது என்று மொரகொட குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில்
கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி
ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் டோக்கியோவுக்கு செல்வார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.