சீன உளவுக் கப்பலை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் இந்திய அரசாங்கம்! இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பலை இந்திய அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கச்சத்தீவை மீட்பதற்காக இந்திய அரசாங்கம் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து அதிகம் பேசுவது பொருத்தமற்றது என கூறியுள்ளார்.
சீன உளவுக் கப்பல்
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிலைமையை மத்திய அரசாங்கம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித மென்மையான அணுகுமுறையும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நிலைமையை இந்தியா புரிந்து கொண்டுள்ளதால், கப்பல் விவகாரம் பாரிய இராஜதந்திர மோதலை ஏற்படுத்தாது என நம்புவதாக இலங்கையின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்பில் ரணில்
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய அகமதாபாத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பெர்னாண்டோ, சீனா இலங்கையில் நிறைய முதலீடுகளை செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சரும் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
