சீன கப்பலின் இலங்கை வருகை : சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யாங் 6(Shi Yang 6) இலங்கைக்கு வருவதை ஒத்திவைக்க இலங்கை விரும்பினாலும், அக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமது சீன விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் இது குறித்து கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
60 பேர் கொண்ட குழுவைக் கொண்ட இந்த கப்பல் 'அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்' ஆகும், இது கடல்சார்வியல், கடல் புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனைகளை மேற்கொள்வதாக சீனாவின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், சீனாவுடன் புவிசார் அரசியல் போட்டியைக் கொண்டிருக்கும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகியவை இந்த வருகையை ஆட்சேபிக்கின்றன.
இந்த விடயத்தில் முத்தரப்பு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள இலங்கை, தமது கடற்பரப்பில் தனது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சீன அதிகாரிகளுக்கு சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
சீனாவின் உறுதிப்பாடு
இந்தியாவின் அதிருப்தி காரணமாக, தமது ஆராய்ச்சி நடவடிக்கைகளில்; வடக்குப் பகுதியை விலக்குமாறு சீனாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
அத்துடன் இந்த மாதம் கொழும்பில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேசன் (IORA) உச்சிமாநாட்டில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
எனவே கப்பல் வருகை நவம்பர் மாதத்தில் இடம்பெற வேண்டும்என்று இலங்கை விரும்புகிறது. எவ்வாறாயினும், இந்த மாதம் இந்த விஜயம் இடம்பெறவேண்டும் என்பதில் சீனா உறுதியாக உள்ளது.
இந்த விடயம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மேலும் ஒரு இராஜதந்திர சவாலாக அமைந்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவின் ஆதரவை முக்கியமானது என்ற அடிப்படையில், சீனாவுக்கு இந்த கப்பல் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.