இலங்கையில் கைதான சீன பாதாள உலகக் குழுத் தலைவர்
இலங்கையில் பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன முதலீட்டார்களை அச்சுறுத்தி கப்பம் பெற்றுக் கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களை அச்சுறுத்தி கப்பம் வசூலித்தமை உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சீன பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
ழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், குறித்த சீனப் பிரஜையை கைது செய்துள்ளனர்.

இந்த சீனப் பிரஜை, சீனாவில் பாதாள உலகக் குழுவொன்றை நடத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, அந்நாட்டு பொலிஸாரிடமிருந்து தப்பி ரகசியமாக இலங்கை வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பிலுள்ள பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்து தொடர்ச்சியாகக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் சில நாட்களாக மேற்கொண்ட நுணுக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் பின்னர், கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து இச்சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தருணத்தில் அவரிடமிருந்து இரண்டு நாடுகளைச் சேர்ந்த 2 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வெவ்வேறு நபர்களுக்குச் சொந்தமான 7 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 42 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் குற்றவாளியை சீனத் தூதரகத்தின் ஊடாக இலங்கையிலிருந்து நாடு கடத்துவதற்கு புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri