ட்ரம்ப்பை சந்தித்த பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கும் சீனா - கவலை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே உறவுகளில் சற்று சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ள போதிலும், பிலிப்பைன்ஸ் நாடு இதுவரையில் சீனாவால் "கடுமையான அச்சுறுத்தலுக்கு" உள்ளாகியே இருக்கிறது என்று பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பர்டோ தியோடோரோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் “ஷங்ரி-லா டயலொக் (Shangri-La Dialogue)” பாதுகாப்பு மாநாட்டின் இடையே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பு
அமெரிக்காவும் சீனாவும் தங்களது தற்காப்புத் திறன்களில் சமநிலையில் இருக்கும்போது, பதற்றத்தைத் தணிக்க முயல்வது இயல்பானது என்று குறிப்பிட்ட அவர், ஆனால் பிராந்திய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சீனாவின் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு, சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியில் சீனா உரிமை கோரும் எல்லைகளுக்கு எதிராக பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூணை மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனக் கப்பல்களுக்கு இடையே பலமுறை மோதல் போக்குகளும் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்கா - சீனா உச்சி மாநாடோ அல்லது மத்திய கிழக்கில் நடக்கும் போரோ பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா அளித்துள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்த உறுதிமொழிகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தியோடோரோ தெளிவுபடுத்தினார்.
சீனாவின் ஏற்றுமதியில் நம்பிக்கை இல்லை..
மேலும், ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிற நட்பு நாடுகளுடனான பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு உறவுகள் இந்த அமெரிக்க உறுதிமொழியை மேலும் பலப்படுத்துவதாகவும், பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அதிக நாடுகள் இணையும் போது கூட்டுத் தடுப்பு ஆற்றல் வலுவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட தட்டுப்பாடுகளின் போது பிலிப்பைன்ஸ்க்கு எரிபொருள் மற்றும் உரங்களை வழங்க சீனா முன்வந்ததாகக் கூறப்படும் தகவல் குறித்து பேசிய அவர், சீனா தனது உதவிகளை எவ்வளவு தான் சர்க்கரை தடவி வழங்கினாலும், அது சீனாவின் நீண்டகால நல்லெண்ணத்தை நிரூபிக்காது என்றும், அது உண்மையில் ஒரு தந்திரமான செயல் என்றும் விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்றும், தற்போது நாட்டின் பாதுகாப்பிற்காகச் செய்யும் கடமையிலேயே முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.