புலம்பெயர்ந்தவர்கள் என்றால் தமிழர்கள் மாத்திரமா..! சீன கப்பல் விவகாரம் மிகப் பெரிய ராஜதந்திர சிக்கல்
சீன கப்பலுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளித்தமை சம்பந்தமாக மிகப் பெரிய ராஜதந்திர சிக்கலை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த சிக்கல் ஊடாக சர்வதேச தொடர்புகள் அழிந்து போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இட்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சீனாவின் கப்பல் தொடர்பான விவகாரம் - தீர்க்க முடியாத ராஜதந்திர சிக்கல்
எதிர்காலத்தில் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை பாரதூரமான பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை விடயத்திலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுதான் இலங்கை சர்வதேச தொடர்புகள் விடயத்தில் அடைந்துள்ள நிலைமை. சீன கப்பல் விவகாரம் தொடர்பான பிரச்சினையை முன்னதாக தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
நானும் மங்கள் சமரவீர வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய போது நானும் வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக இரண்டு ஆண்டுகள் கடமையாற்றினேன். இதனால், எனக்கு வெளிவிவகார ராஜதந்திர விடயங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது தெரியும்.
முடிவுகளை எடுக்கும் முன்னரும் அவற்றை திரும்ப பெறும் முன்னரும் நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும். எமக்கு இந்தியா மிக முக்கியமானது. சீனாவும் மிகவும் முக்கியமானது.
இந்தியா மற்றும் சீனாவுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டால் இறுதியில் எமக்கு என்ன நடக்கும். இந்த தீர்மானங்களை எடுத்தவர்கள் யார்?. தீர்மானங்களை மாற்றியது யார்?. இந்த தீர்மானங்களை மீண்டும் மாற்றியது யார்?. எமது வெளிவிவகார தொடர்புகளை முற்றாக சீர்குலைத்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு யாருடைய பொறுப்பின் கீழ் இருந்தது. அமைச்சின் செயலாளராக பணியாற்றியது யார்?. கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொழம்பகே வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றினார்.
கடற்படை தளபதிகளை கொண்டு வெளிவிவகார அமைச்சை நடத்த முடியுமா?. நாடுகளின் தூதுவர்களாக யாரை நியமித்துள்ளனர்.
விரைவில் ஜெனிவாவில் அடுத்த பிரச்சினை ஏற்படும். சீனாவின் இந்த கப்பல் பிரச்சினை மாத்திரமல்ல, ஜெனிவாவில் மனித உரிமை தொடர்பான பிரச்சினை வரும். சர்வதேச உறவுகளுக்கான பலங்களை உடைத்தெறிந்துள்ளனர்.
இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். தற்போது இந்த பிரச்சினை தீர்த்துக்கொள்ள முடியாத கட்டத்திற்கு வந்துள்ளது. இரண்டு நாடுகளில் ஒன்றுடனான இலங்கையின் உறவு பாதிக்கப்படும்.
கோட்டாபயவின் மனைவி, பிள்ளைகளும் புலம்பெயர்ந்த அமெரிக்கர்கள்
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறி வந்தவர்கள், நாட்டின் முழு பாதுகாப்பையும் பாதிக்க செய்துள்ளனர். எங்கே தேசிய பாதுகாப்பு?. நாட்டு மக்களுக்கு உண்ணவும் வாழவும் முடியாது என்றால் எங்கே தேசிய பாதுகாப்பு.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதாக கூறி வந்தவர் நாட்டில் இருந்து வெளியேறி சென்று விட்டார். தற்போது அவருக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டுக்கு நாடு தப்பிச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை பற்றி நான் இப்படி கூறுவது தொடர்பில் மன்னியுங்கள். தேசிய பாதுகாப்பு அல்ல, அவரது பாதுகாப்பை கூட அவரால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று இனவாதத்தை முன்வைக்க வேண்டாம். இனவாதத்தை முன்வைத்தே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த போவதாக கூறினர். இதன் காரணமாகவே நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் ஒரே நாட்டினர் என்று ஏற்கவில்லை.
தொடர்ந்தும் இந்த குழியில் விழ வேண்டும் என்ற கூறுகிறீர்கள். தமிழர்களா, முஸ்லிம்களா, சிங்களவர்களா என்று கூறிக்கொண்டு இருக்க தேவையில்லை. புலம்பெயர்ந்தவர்கள் என்பது புலம்பெயர்ந்தவர்கள்.
சாதாரணமாக புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறினால், புலம்பெயர் தமிழர்கள் என்று கூறுகின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் என்றால், யார்?. ஏற்கனவே எமது நாட்டில் வாழ்ந்த பிரஜைகள் வெளிநாடுகளில் சென்று வாழ்ந்து வருகின்றனர்.
கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர்ந்தவர் இல்லையா?. கோட்டாபய ராஜபக்சவின் மனைவி, பிள்ளைகள் புலம்யபெயர்ந்தவர்கள் இல்லையா?. அவர்களும் புலம்பெயர்ந்தவர்களே. காரணம் அவர்கள் அமெரிக்கர்கள்.
இனவாத ரீதியாக இந்த பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. தடைக்கப்பட்டுள்ள அமைப்புகளில் எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என்பதை நான் இன்னும் தேடியறியவில்லை.
முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நோக்கி தற்போதாவது செல்ல வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு எனவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.