இலங்கையின் முயற்சியை சீனா அழிக்காது என எதிர்பார்க்கின்றோம்-அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கு மிகப் பெரிய இருத்தரப்பு கடனை வழங்குநரான சீனா கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்து, இலங்கைக்கு உடனடியாக உறுதிமொழியை வழங்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்க் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சீனாவின் உறுதிமொழி அவசியம்
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை ஏற்படுத்த இலங்கைக்கு சீனாவின் உறுதிமொழி அவசியம் என்பதால், இலங்கைக்கு காலதாமதம் செய்ய முடியாது என்பதாலும் சீனா காலம் தாழ்த்தாது அந்த பணியை செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை சம்பந்தமாக சீனாவுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை செய்து, இலங்கை நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில், சீனா அதனை அழிக்காது என இலங்கை மக்கள் சார்பில் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
இலங்கையின் கடனில் 40 வீத உரிமையை கொண்டுள்ள தனிப்பட்ட கடன் உரிமையாளர்கள்
எனினும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இறுதியில் இலங்கைக்கான தமது கடனை தள்ளுபடி செய்ய இணங்கினால், இலங்கையின் வெளிநாட்டு கடன் தொகையில் சுமார் 40 வீதத்தை கொண்டுள்ள தனிப்பட்ட கடன் உரிமையாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நாங்கள் தனிப்பட்ட கடன் உரிமையாளர்களுடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
எமக்கு தெரிந்த வகையில் அவர்கள் மிகவும் நேர்மறையாக இருப்பதுடன் எங்களுடன் இணக்கமாக செயற்பட விருப்பத்துடன் இருக்கின்றனர் எனக்கூறியுள்ளார்.