தாய்வானைச் சுற்றி கடல்சார் ரோந்தை தீவிரப்படுத்தும் சீனா: நிபுணர்கள் எச்சரிக்கை
தாய்வான் தீவின் கிழக்குக் கடல் பகுதிகளில் சீனா தனது கடலோரக் காவல் படை மற்றும் சிவில் கப்பல்களின் ரோந்து நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்தி வருகிறது.
இதன் மூலம் தாய்வானை வெளி உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச உதவிகளில் இருந்து துண்டிக்கும் 'முற்றுகை உத்தியை' சீனா பயிற்சி செய்து பார்ப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சீனாவின் கடல்சார் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் கடலோரக் காவல் படை இணைந்து பல சிறப்பு கடல்சார் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
எச்சரிக்கை
வழக்கமாக தாய்வானையும் சீன பிரதான நிலப்பரப்பையும் பிரிக்கும் தாய்வான் நீரிணைப் பகுதியில் மட்டுமே ரோந்து செல்லும் சீனா, முதன்முறையாக தாய்வானின் கிழக்கு கடல் பகுதியில் அடுத்தடுத்து தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த ரோந்து நடவடிக்கைகளின் போது அப்பகுதியில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைத் தொடர்புகொண்டு, அவற்றின் புறப்பாடு மற்றும் செல்லுமிடம் குறித்த விவரங்களைச் சீனப் படையினர் கோரி வருகின்றனர்.
தாய்வான் தனது ஆற்றல் மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு 100% இறக்குமதியையே நம்பியிருக்கும் நிலையில், சீனாவின் இந்த 'சாம்பல் மண்டல' (Grey zone) உத்திகள் எதிர்காலத்தில் முழுமையான கடல்சார் முற்றுகையாக மாறக்கூடும் என்று பல்கலைக்கழக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அத்துமீறல்
சீனாவின் இந்த அத்துமீறல்களுக்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இருப்பினும், அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், இந்தச் சூழலைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தாய்வான் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.