அதிகாலை 243 பேருடன் திடீரென மாயமான கப்பலினால் பரபரப்பு - மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல்
புதிய இணைப்பு
காணாமல்போன ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பலில் இருந்து இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மீட்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் மேலும் 140 பேரின் நிலை தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
இந்தோனேசியாவில் 243 பேரை ஏற்றிச்சென்ற ‘Virgo Transport 8’ என்ற பயணிகள் கப்பல் காணாமல்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் ஜாவா கடல் பகுதியில் கப்பல் தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட கப்பலுடனான தொடர்பு
இந்த கப்பல் நேற்று (12) கிழக்கு ஜாவாவின் சுரபயா (Surabaya) நகரிலிருந்து தெற்கு கலிமந்தன் (Kalimantan) மாகாணத்தில் உள்ள பஞ்சார்மாசின் (Banjarmasin) நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று(13) அதிகாலை சுமார் 2 மணியளவில் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தோனேசிய தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலின் இறுதி நிலை (பஞ்சார்மாசின்) Banjarmasin பகுதியில் இருந்து சுமார் 80 கடல் மைல் தொலைவில் பதிவாகியிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலை தொடர்புகொள்ள முடியாத நிலையில், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாக அந்நாட்டின் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கப்பலின் இறுதி நிலை
கப்பல் கடைசியாக தொடர்பை இழந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KN SAR Laksmana 241' என்ற மீட்புக் கப்பல் உள்ளிட்ட குழுக்கள் கப்பலின் இறுதியாக பதிவான நிலையை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கப்பல் மோசமான வானிலையை எதிர்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.