அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான் : அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்துள்ள சீனா
இலங்கைக்குள் சீனாவின் இராணுவ முகாம் ஒன்றை ஸ்தாபிக்க சீனா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியான அமெரிக்காவின் அறிக்கைக்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் பதில் வழங்கியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கைக்கு டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ள சீனத் தூதரகம், “அனைவரும் திருடுவார்கள் என திருடன் நினைப்பான்” என கூறியுள்ளது.
இதனிடையே அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்த தனது முகாம்களை அகற்றினாலும் நிதி, அரசியல், சமூகம் மற்றும் சுற்றாடல் போன்ற பல்வேறு முகாம்களை அமைத்து வருகிறது என சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க திணைக்களம் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகளில் சீனாவின் தலையீடு என்ற பெயரில், வெளியிட்டிருந்த அறிக்கையில், சீனா உலகில் பல பாகங்களில் தனது இராணுவ பலத்தை உறுதிப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. அதில் இலங்கையும் அடங்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.