சீனா கடற்றொழிலாளர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது: யாழ். மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் தெரிவிப்பு!
இந்திய அத்துமீறிய இழுவைமடி படகுகளால் எமது கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் செயற்படுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீனா தூதரக அதிகாரிகளை எமது கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
அவர்களை சந்தித்ததன் நோக்கம் கடந்த கொரோனா காலங்கள் மற்றும் இந்திய இழுவைப் படகுகளினால் பாதிக்கப்பட்ட எமது கடற்றொழிலாளர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை செய்தார்கள். அதற்கு நன்றியை தெரிவித்ததோடு தொடர்ந்தும் இந்திய இழுவைமாடியால் பாதிக்கப்பட்டு வரும் எமது கடற்றொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம்.
இதே கோரிக்கையை இந்தியா அரசிடமும் முன் வைத்திருக்கிறோம். யார் எமது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும் அதை நாம் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
இந்தியா அத்துமீறிய இழுவைமடிப் படகுகளால் தொடர்ச்சியாக நாம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சீனா எமக்கு உதவி செய்கிறோம் என எமது கடல் பிராந்தியத்தால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத் எதிர்பார்த்தால் அதைச் செய்ய முடியாது.
இந்தியா எமது அயல் நாடு. அது மாத்திரமல்ல எமது தொப்புள் கொடி உறவு என்ற ரீதியில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எமது கடலை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |