சிறுவனின் கொலையை மூடி மறைக்க உதவினார்களா பொலிஸார்.. நீதி கேட்டு கதறி அழும் தாய்
கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த என்னுடைய மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும். எனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம். சரியான நீதி கிடைக்க வேண்டும்.
நீதியான விசாரணை
பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை.இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருக்கின்றது.
பொலிஸார் எங்களது வாக்குமூலத்தையும் சரியான முறையில் பதிவு செய்யவில்லை. நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை. பக்க சார்பாக செயற்படுகின்றனர்.
விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிடிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார்.
குறித்த விபத்தானது தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இழப்பீடு
தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார்.
தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும் இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேருந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் கூறியுள்ளார்.
பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிடிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர்.
உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென தாயார் இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக் கொண்டார்.
மேலும், சிறுவனின் கொலையை மூடி மறைக்க பொலிஸார் உதவியதாகவும் சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒருபுறம் கிம் - ட்ரம்ப் சந்திப்பு... மறுபுறம் வடகொரியாவில் ஊடுருவிய அமெரிக்க சிறப்புப்படை: திகில் பின்னணி News Lankasri

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
