யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்..!
புதிய இணைப்பு
இன்று மாலை 5.00 மணியளவில் மூளாய் பகுதியில் இரண்டு குழுவினருக்கு இடையே வன்முறை சம்பவம் இடம்பெற்றது. இதன்போது சிலர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்த வேளை பொலிசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் பதிலுக்கு வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் இருவரை கைது செய்தனர். இந்நிலையில் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குவிக்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் விசேடமாக யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதலாம் இணைப்பு
யாழ். வட்டுக்கோட்டை - மூளாய் பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன் காரணமாக அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் இருவரை கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் இரவு இரு வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதன் தொடர்ச்சியாக இன்றும் மோதல்நிலை தொடர்ந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோதல் நிலையை கட்டுப்படுத்த முயன்ற போது ஒரு குழுவினர் பொலிஸார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமை கைமீறி சென்றதன் காரணமாக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்தவர்களை களைத்து விட்டு இருவரை கைது செய்துள்ளனர்.
எனினும், இரு குழுவினர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் ஒரு சாராரை மட்டும் பொலிஸார் எப்படி கைது செய்யலாம் எனக் கேட்டு பொதுமக்கள் முரண்பட்டுள்ளனர்.










