செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம்
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம்(23.7.2026) 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
என்பு கூடுகள் அடையாளம்
அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட 467வது என்புக்கூடு இதுவரை காணப்படாத வித்தியாசமான முறையில் அது காணப்படுகின்றது.
அதற்கான சவப்பெட்டியின் அடையாளமும், அதேநேரம் அந்த என்புக்கூட்டில் மழைக்காலத்துக்கு பாவிப்பதற்கான மழை அங்கி ஒன்றும் கால் என்பு பகுதியில் காலுறை ஒன்றும் காணப்படுகிறது.
அதனால், அது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஐயமும் இருக்கின்றது. நீதிமன்றம் இது சம்பந்தமாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
அந்தவகையில் மழை அங்கியுடன் காணப்படும் என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது. இது சம்பந்தமாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை தெளிவாக சொல்ல முடியும் என மேலும் தெரிவித்தார்.