பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு!
இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் வழமை போன்று குழந்தையைப் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுத் தனது வேலைக்குச் சென்றுள்ளார்.
கைது
இந்நிலையில், பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் தாயைத் தொடர்புகொண்டு, குழந்தையை மித்தெனிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தாய் அங்கு சென்றபோதே, பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறிய குளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

குழந்தையின் பாதுகாப்பில் அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் செயற்பட்ட குற்றச்சாட்டில், பராமரிப்பு நிலையத்தின் காப்பாளர் எம்பிலிப்பிட்டிய தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.